ADDED : ஆக 31, 2026 07:22 PM
புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கையில் அமைச்சர் சிவக்கொழுந்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மீது வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
அங்கன்வாடி மையங்களுக்கு வரும் 2 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு வழிக் கற்றல் முறையில் கல்வி வழங்கப்படுகிறது.
இம்முறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் குழந்தைகளின் நுண்தசை இயக்கத் திறன், அறிவுசார் வளர்ச்சி மற்றும் வண்ணங்களின் அடிப்படையில் பொருட்களை வகைப்படுத்தும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கியக் கவனம் செலுத்தும் வகையில் ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திற்கும் வண்ணமிடும் புத்தகங்கள், வண்ணப் பென்சில்கள், நினைவாற்றலை வளர்க்கும் பிளாஷ் அட்டைகள், செயல்பாட்டுத் தாள்கள், சுவரொட்டிகள் மற்றும் கட்டமைப்புத் தொகுதிகள் போன்ற கல்விசார் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
சக் ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 வழிகாட்டுதல்களின்படி, அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கீழ் முன்பருவக் கல்விக் கற்றல் உபகரணத் தொகுப்பு வழங்குவதற்காக, ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திற்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.3,000 வீதமும், இடைப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.1,000- வீதமும் நிதி வழங்கப்படவுள்ளது.
இதன்படி, 855 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.1,000- வீதம் முன்பள்ளிக் கற்றல் உபகரண தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான மொத்தச் செலவு ரூ. 8,55,000 செலவாகும்.
