ADDED : ஆக 13, 2026 07:01 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை, தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி நுாலகத்தின் சார்பில், இந்திய நுாலக அறிவியலின் தந்தை ரங்கநாதனின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு, நுாலக தின விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் கருப்புசாமி, நுாலக அறிவியலின் தந்தை ரங்கநாதனின் உருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். அவர் பேசுகையில், ‘மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது நுாலகர் மற்றும் நுாலகப் பணியாளர்களின் முக்கியப் பொறுப்பாகும். நுாலகம் புத்தகங்களை வழங்கும் இடமாக மட்டுமல்லாமல், கற்றல், வாசிப்பு மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கான முக்கிய மையமாகவும் செயல்பட வேண்டும்.
மாணவர்கள் தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவதற்கு ஏற்ற சூழலை நுாலகத்தில் ஏற்படுத்த வேண்டும். புதிய நுாலகக் கட்டடத்தை குளிர்சாதன வசதியுடன் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
விழாவில், நுாலகர் தீபக் (ஏ.ஐ.) செயற்கை நுண்ணறிவு மாணவர்கள் தகவல்களைத் தேடிப் பெறும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம், மிகுந்த கவனம், விமர்சனச் சிந்தனை முதலானவை வளர்க்கப்பட வேண்டும்’ என்றார். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
