ADDED : நவ 13, 2026 10:02 PM
புதுச்சேரி: போலி உயில் மூலம் இடம் விற்பனை செய்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி ரோடியர்பேட்டை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்,53; ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவர், அரவிந்தர் வீதியில் 1,800 சதுரடி இடத்தை ஆறுமுகம் மகன்கள் சிவசுப்ரமணியம், வேல்முருகன் ஆகியோரிடமிருந்து வாங்கியுள்ளார். சொத்து ஆவணங்களை சரிபார்த்த போது, கோகிலாம்பாள் என்பவர் ஆறுமுகத்தின் தந்தை சாமிக்கண்ணு பெயரில், உயில் எழுதியுள்ளார்.
அதனை ஆய்வு செய்தபோது அது போலி உயில் என, தெரியவந்தது. மேலும் அந்த உயிலை வைத்து ஆறுமுகம் தனது மகன்கள் சிவசுப்ரமணியம், வேல்முருகன் ஆகியோருக்கு செட்டில்மென்ட் பத்திரம் செய்துள்ளார். அந்த செட்டில் மென்ட் பத்திரத்தின் அடிப்படையில் அவர்கள் பன்னீர்செல்வத்திடம் இடத்தை விற்றது தெரியவந்தது.
இதையடுத்து பன்னீர்செல்வம் சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகாரளித்தார். இதையடுத்து மூன்று பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
