/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தல் இறுதி கட்ட பிரசாரம் ஓய்ந்தது! பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிரம்
/
லோக்சபா தேர்தல் இறுதி கட்ட பிரசாரம் ஓய்ந்தது! பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிரம்
லோக்சபா தேர்தல் இறுதி கட்ட பிரசாரம் ஓய்ந்தது! பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிரம்
லோக்சபா தேர்தல் இறுதி கட்ட பிரசாரம் ஓய்ந்தது! பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிரம்
ADDED : ஏப் 18, 2024 06:50 AM

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 26, வேட்பாளர்கள் போட்டுயிடுகின்றனர். வேட்பு மனு தாக்கல் முடிந்து கடந்த மாதம் 20ம் தேதி முதல் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தை துவக்கினர்.
முதற்கட்டமாக, ஒவ்வொரு ஊரியிலும் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று, ஓட்டு சேகரித்தனர். அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக, சுயேச்சை வேட்பாளர்களும் பிரசாரம் செய்தனர்.
பிரசாரத்தின் இறுதிநாளான நேற்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாரை, தப்பட்டை, ஆட்டம், பாட்டத்துடன் பைக்குகளில் ஊர்வலமாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து வீதிகளும் களை கட்டியது. மேளதாளங்கள் முழங்க பைக்குகளில் ஊர்வலமாக சென்றனர். இதனால் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பா.ஜ.,
மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோவில் எதிரே நேற்று மதியம் 12 மணிக்கு முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்தை பிரசாரத்தை துவக்கினார். மாலை 5:59 மணியளவில் பிரசாரத்தை கதிர்காமம் முருகர் கோவிலில் நிறைவு செய்தார்.
முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோருக்கு பூசணிக்காயால் திருஷ்டி கழிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.கள்., ரமேஷ், ஆறுமுகம் கலந்து கொண்டனர்.
காங்.,
உப்பளம் தொகுதியில் காலை 9:00 மணிக்கு காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பிரசாரத்தை துவக்கினார். அவருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா, கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.தொடர்ந்து வாகனத்தில் ஊர்வலமாக சென்று, ஓட்டு சேகரித்தனர். ராஜ்பவன் தொகுதி, உருளையன்பேட்டை தொகுதிகளில் ஊர்வலமாக சென்ற காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பிரசாரத்தை வில்லியனுாரில் மாலை 5:40 மணியளவில் நிறைவு செய்தார்.
அ.தி.மு.க.,
அ.தி.மு.க.வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து மாலை 4:00 மணியளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து பைக்கில் ஊர்வலமாக சென்று மாநில செயலாளர் அன்பழகன் ஓட்டு சேகரித்தார்.
அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, இந்திரா சதுக்கம், புது பஸ்டாண்ட், மறைமலையடிகள் சாலை, புஸ்சி வீதி வழியாக சென்ற ஊர்வலம், மீண்டும் மாலை 5:00 மணியளவில் அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சியினர் நேற்று வேட்பாளர் மேனகாவுடன் வாகனங்களில் ஊர்வலமாக சென்று இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். காலை 9:00 மணிக்கு காலாப்பட்டு தொகுதியில் துவங்கிய வாகன ஊர்வலம், நகர பகுதி முழுவதும் சுற்றி வந்தனர். மாலை 5.30 மணியளவில் இ.சி.ஆர்., கொக்குபார்க்கில் ஊர்வலம் நிறைவடைந்தது.
கடந்த ஒரு மாதமாக வெயிலையும் பொருட்படுத்தாமல்வீதி வீதியாக நடந்த தேர்தல் பிரசாரம் தாரைப்பட்டை, ஆட்டம்பாட்டத்துடன் நிறைவு பெற்றது.
தீவிர ஓட்டு பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், இனி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றதும், பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வினியோகம் செய்வர் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதை தடுக்கவும், தேர்தல் கமிஷன் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலம் முழுதும், பறக்கும் படையினர், இன்றும் நாளையும் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

