/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து தொழிற்சாலை நடத்தியவர் கோர்ட்டில் சரண்
/
போலி மருந்து தொழிற்சாலை நடத்தியவர் கோர்ட்டில் சரண்
போலி மருந்து தொழிற்சாலை நடத்தியவர் கோர்ட்டில் சரண்
போலி மருந்து தொழிற்சாலை நடத்தியவர் கோர்ட்டில் சரண்
ADDED : டிச 11, 2025 05:34 AM

புதுச்சேரி: புதுச்சேரி கோர்ட்டில் சரணடைந்த போலி மருந்து தொழிற்சாலை அதிபர் உள்ளிட்ட இருவரை, சிறப்பு புலனாய்வு குழுவினர், காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
பிரபல சன்பார்மா நிறுவனம் அளித்த போலி மருந்து புகாரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், மதுரையை சேர்ந்த ராஜா, பிரபல நிறுவனங்களின் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து, போலி மருந்து விவகாரம் தொடர்பாக, ராணா, மெய்யழகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தகவலில், போலி மருந்து தயாரித்த குருமாம்பேட்டை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் இருந்த மூன்று கிடங்குகளில் சோதனை நடத்தி, 40 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
போலி மருந்து தொழிற்சாலை அதிபரான ராஜா, கிடங்கு உரிமைதாரரான விவேக் புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றனர். இந்த விவகாரம் குறித்து, எஸ்.பி., நல்லான் கிருஷ்ணராயபாபு தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை துவக்கினர்.
இக்குழுவினர், ராஜா, விவேக் முன்ஜாமினை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். மருந்து தரக்கட்டுப்பாட்டு துறையினர், ராஜா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதையறிந்த, தலைமறைவாக இருந்த ராஜா, விவேக், நேற்று காலை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த்ராவ் இங்கர்சால் முன் சரணடைந்தனர்.
இருவரையும், நேற்று மாலை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, ரகசிய இடத்தில் வைத்து, விசாரணையை துவக்கினர். அதனால், போலி மருந்து விவகாரத்தில் விரைவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

