ADDED : ஆக 14, 2026 07:25 PM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே ஸ்கூட்டரில் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தங்க செயின் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனூர் அடுத்த ஊசுடேரி லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு கிள்ளியூரை சேர்ந்த ராஜ்குமார் மகள் தர்ஷா(22 ) இவர் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:45 மணியளவில் புதுச்சேரிக்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் கல்லுாரிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஊசுடேரி கன்னியம்மன் கோவில் பகுதியில் வந்த போது அவரது டாக்டர் கோட் கீழே விருந்துவிட்டது. ஸ்கூட்டரை நிறுத்தி, அந்த கோட்டை எடுக்க இறங்கியபோது, பின் தொடர்ந்து இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், மாணவியிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 12 கிராம் தங்க செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இது குறித்து மாணவி தர்ஷா கொடுத்த புகாரின் பேரில், வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். ஊசுட்டேரி சாலையில் கல்லுாரி மாணவியை கத்தியை காட்டி மிரட்டி செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
