/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்
/
சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்
ADDED : செப் 04, 2025 12:54 AM

கடந்த வாரம் பார்த்தமஹாத்யோகா பிராணாயாமத்தின் தொடர்ச்சியான முழுமையான சுவாசப் பயிற்சியை இந்த வாரம் பார்ப்போம்.
முழுமையான சுவாசப் பயிற்சி ஒரு கையை கீழ் மார்பிலும், மற்றொரு கையை நடு மார்பிலும் வைக்கவும். நுரையீரலின் கீழ் பகுதி (முன், பக்கவாட்டு, பின்) நிரம்பும் அளவிற்கு நீண்டு சுவாசிக்கவும். பின்பு நடு மார்பு (முன், பக்கவாட்டு, பின்) நிரம்பும்படி சுவாசிக்கவும்.
வலது கையை மேல் மார்பு பகுதியில் கழுத்துப்பட்டையின் முன்பு வைத்து மேல் நுரையீரல் (முன், பக்கவாட்டு, பின்) பகுதியை நிரப்பவும்.
இவை அனைத்தும் ஒரே நீண்ட, பெரும் சுவாசத்தினால், நிரப்ப வேண்டும். சில விநாடிகளுக்கு காற்றை உள்ளிழுத்துக் கொண்டு, வலது கையை கீழ் மார்புப் பகுதிக்குக் கொண்டு வந்து காற்றை (பின், பக்கவாட்டு, முன் என்ற வரிசையில்) வெளியிடவும்.
அதேபோல் நடு மார்பு (பின், பக்கவாட்டு, முன்), அதன்பிறகு மேல் மார்புப் பகுதி (பின், பக்கவாட்டு மற்றும் முன்) என்ற வரிசையில் செய்ய வேண்டும்.
இதுவே ஒரு முழுமையான மஹாத்யோக பிராணாயாமம் அல்லது பேரலை போன்ற மூச்சி பயிற்சி. ஆரம்பத்தில் இதை 9 முறையும், 6 மாதம் அல்லது ஓராண்டு பயிற்சிக்கு பின் 18 மற்றும் 27 சுற்றுகள் வரை செய்யலாம்.
முதலில் பயிற்சி மேற்கொள்பவர்கள் நுரையீரலின் எந்த பகுதிக்கு காற்றை செலுத்துகிறோம் என்பதற்கேற்றபடி கைகளை அந்த பகுதியில் வைக்க வேண்டும். நன்கு பழகி பிராணாயாமத்தில் தேர்ச்சி பெற்றபின், கைகள் வைப்பதைத் தவிர்த்து, மனதை ஒருநிலைப்படுத்தி, சரியாக அந்தப் பகுதியை மனதில் வைத்துக் கொண்டு காற்றை நிரப்பலாம்.
இதுவே ஹதேனாக்கள் பயிற்சி முறைகளாகும். இந்த பயிற்சிகளை செய்வதன் மூலம் நம் உடலை நீண்ட, மெதுவான, முழுமையான சுவாசத்திற்கு தயார் செய்கிறது.
இதன் மூலம் நுரையீரலின் அனைத்து பகுதிகளும் அதன் முழுமையான திறனிற்கு ஏற்றவாறு இயங்கும்.
இனி, உடலில் சக்தியை பெருக்கி, சமநிலை அடையும் 'லோம விலோம' பயிற்சிகள் குறித்த விளக்கத்தை அடுத்த வாரம் பார்ப்போம்...