/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் திறப்பு
/
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் திறப்பு
ADDED : டிச 26, 2024 05:55 AM

அரியாங்குப்பம்: தேங்காய்த்திட்டில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமிர்ஷா, புதிதாக 10 ஆயிரம் கூட்டுறவு கடன் சங்க பால் மற்றும் மீன்வள கூட்டுறவு சங்கங்களை, காணொலியில் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து,புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில், தேங்காய்திட்டில், முத்துமாரியம்மன் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்த முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
விவசாயிகள் விவசாயத்தை மட்டும் நம்பி இல்லாமல், உப தொழிலாக கறவை மாடுகள் வளர்த்து பால் உற்பத்தி செய்து வருவாய் ஈட்டலாம்.
மாநிலத்திற்கு தினசரி ஒரு லட்சம் லிட்டர் பால் தேவை. ஆனால், 45 ஆயிரம் லிட்டர் பால் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி பால் வெளிமாநிலத்தில் வாங்கி, பதப்படுத்தி மக்களுக்கு கொடுத்து வருகிறோம்.
விளை நிலம் குறைந்ததால், கறவை மாடு வளர்ப்பு குறைந்து, பால் உற்பத்தியும் குறைந்துவிட்டது. கால்நடை துறை மூலம் 75 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளோம்.
படித்த இளைஞர்கள் மாடுகள் வளர்த்து பண்ணை உருவாக்கி, பால் உற்பத்தி செய்து, பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யலாம். அதற்கு வங்கிகளும், அரசும் உதவி செய்யும்' என்றார்.
பாஸ்கர் எம்.எல்.ஏ., கூட்டுறவு துறை செயலர் நெடுஞ்செழியன், பதிவாளர் யஷ்வந்தய்யாஉட்பட பலர் பங்கேற்றனர்.