துளி நீரில் அதிக சாகுபடி திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
துளி நீரில் அதிக சாகுபடி திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
UPDATED : அக் 24, 2026 01:02 AM
ADDED : அக் 24, 2026 12:59 AM

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி விவசாயிகள், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன கருவிகளின் அங்கீகரிக்கப்பட்ட வினியோகிஸ்தர்கள், நேரடி சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் துறை துணை இயக்குனர் ஜெயக்குமார் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாநில விவசாயிகளுக்காக, மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில், சிறு குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்திலும், ‘துளி நீரில் அதிக சாகுபடி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர் பாசன கட்டமைப்புகளை அமைத்து கொள்ள மானியம் கோரி விண்ணப்பித்துள்ள விவசாயிகளும், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகளின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வினியோகிஸ்தர்களுடன் நேரடி சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரி பகுதி விவசாயிகளுக்கு வரும் 27 ம் தேதி காலை 10:00 மணிக்கு, தட்டாஞ்சாவடி வேளாண் வளாகத்தில் அமைந்துள்ள உழவர் பயிற்சிக்கூடத்திலும், காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு, வரும் 28ம் தேதி காலை 10:00 மணிக்கு காரைக்கால் தலத்தெரு, கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் உள்ள உழவர் பயிற்சிக் கூடத்திலும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, வேளாண் துறையின் பொறியியல் பிரிவு செய்துள்ளது.
விவசாயிகள் தங்கள் நிலங்களில் அமைக்கப்பட உள்ள சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கட்டமைப்புக்களை அமைப்பது மற்றும் மானியம் பெறுவது தொடர்பான அனைத்து விதமான சந்தேகங்களையும் கலந்துரையாடி நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும், தங்களுக்கு பொருத்தமான பிடித்தமான நிறுவனத்தை தாங்களே தங்கள் விருப்பப்படி தேர்வு செய்து வேளாண் துறைக்கு உடனடியாக தெரியப்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
