/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கனமழை எச்சரிக்கையால் 19 இடங்களில் மோட்டார் அமைப்பு
/
கனமழை எச்சரிக்கையால் 19 இடங்களில் மோட்டார் அமைப்பு
கனமழை எச்சரிக்கையால் 19 இடங்களில் மோட்டார் அமைப்பு
கனமழை எச்சரிக்கையால் 19 இடங்களில் மோட்டார் அமைப்பு
ADDED : அக் 14, 2024 03:58 AM
புதுச்சேரி : புதுச்சேரிக்குவிடுக்கப்பட்டுள்ள கன மழை எச்சரிக்கை தொடர்ந்து, வடிகால் வாய்க்கால்களில் வரும் அதிகப்படியான மழைநீரை வெளியேற்ற 19 இடங்களில் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடல் மற்றும் அதையொட்டி பகுதியில் அடுத்தடுத்து உருவாகும் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழையை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் நடந்தது. அதைத் தொடர்ந்து,பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'புதுச்சேரியில் மணிக்கு 25 மி.மீ., (2.5 செ.மீ.) மழை தொடர்ச்சியாக 2 முதல் 3 நாட்கள் பெய்தாலும் மழைநீர் வடியும் வகையில் வடிகால் வாய்க்கால்கள் உள்ளது. தற்போதைய கால நிலை மாற்றத்தால் ஒரு மணி நேரத்தில் 5 முதல் 10 செ.மீ., வரை மழை கொட்டுகிறது. அதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கொட்டும்போது,மழைநீர் வெளியேற வழியின்றி தேங்குகிறது.
கடந்த காலங்களில் காலியானமைதானம், மண் பரப்புகள் இருந்தது.மழைநீரின் ஒரு பகுதி பூமிக்குள் செல்லும். நகரயமானதால் காலி இடங்களே இல்லை. அனைத்து இடங்களும் வீடுகளாகவும்,சாலைகளாகவும் மாறிவிட்டது. மழைநீர் பூமிக்குள் செல்ல வழியின்றி,சாலைகள் வாய்க்கால் வழியாக ஓடிகடலில் கலக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் அதிகப்படியான மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அங்கு உடனுக்குடன் மழைநீரை வெளியேற்ற மோட்டார்கள் அமைக்கப்பட்டு வருகிறது.ரெயின்போ நகரில் இருந்து சற்குரு, செண்பகா ஓட்டல் வழியாக செல்லும் வாய்க்கால் பகுதியில் 20 எச்.பி., பவர் கொண்ட 3 மோட்டார்களும், வசந்தம் நகரில் 20 எச்.பி., பவர் 2 மோட்டார்கள், ரெயின்போ நகரில் 2 மோட்டார், கிருஷ்ணா நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே 3 மோட்டார், உப்பனாறு வாய்க்காலில் 60 எச்.பி., பவர் கொண்ட ஒரு மோட்டார், குபேர் நகரில் ஒரு மோட்டார், பெரிய வாய்க்காலில் 3 இடங்களில் மோட்டார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 19 மோட்டார்கள் மூலம் வாய்க்காலில் வரும் அதிகப்படியான மழைநீர் உடனுக்குடன் வெளியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.