தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் தேசிய மருத்துவர்கள் தின விழா
தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் தேசிய மருத்துவர்கள் தின விழா
ADDED : ஜூலை 03, 2026 02:25 AM

புதுச்சேரி: பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் மருத்துவமனை வளாகத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கி, பேசுகையில், 'சமூகத்தில் மருத்துவர்களின் பணி கடவுளின் பணிக்கு நிகரானது. ஒரு மனிதனுக்கு மறுவாழ்வு அளிக்கும் உன்னத ஆற்றல் மருத்துவத் துறைக்கு மட்டுமே உள்ளது.
இரவு பகல் பாராது, குடும்ப சூழ்நிலைகளையும் கடந்து, பொதுமக்களின் நல்வாழ்விற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொள்ளும் மருத்துவர்களின் தியாகம் என்றும் போற்றத்தக்கது.
தொழில்நுட்பங்கள் எவ்வளவு வளர்ந்தாலும், ஒரு மருத்துவர் நோயாளியிடம் காட்டும் அன்பும் கனிவும் தான் பாதி நோயை குணப்படுத்துகிறது.
ஏழை, எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவம் சென்றடைய வேண்டும் என்பதே நமது நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும்' என்றார்.
தொடர்ந்து மருத்துவ சேவை, ஆராய்ச்சி மற்றும் கல்வி பணிகளில் சிறந்து விளங்கிய 6 மருத்துவர்களுக்கு அவர்களது அரிய பங்களிப்பை பாராட்டி 5 லட்சம் மதிப்புள்ள நவீன மடிக்கணி மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
பல்வேறு துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு உயரிய விருது வழங்கப்பட்டது.
முன்னதாக மருத்துவமனை டீன் விஸ்வநாதன் வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் உதயா அருணா நன்றி கூறினார்.
விழாவில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் நீலராஜ், பதிவாளர் இளங்கோவன், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
