தேசிய கார் பந்தயத்தில் புதுச்சேரி வீரர் மீண்டும் அசத்தல்
தேசிய கார் பந்தயத்தில் புதுச்சேரி வீரர் மீண்டும் அசத்தல்
UPDATED : அக் 17, 2026 06:50 PM
ADDED : அக் 17, 2026 06:46 PM

புதுச்சேரி: தேசிய அளவிலான கார் பந்தயத்தில், புதுச்சேரி வீரர் ஹேமச்சந்திரன் இரண்டாவது சுற்றிலும் போடியம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் 3-வது சுற்றுப் போட்டியில், எம்.ஆர்.எப் சலூன்ஸ் பிரிவில் ‘ரெட்லைன் ரேசிங் இந்தியா’ அணிக்காக 12-ம் எண் காரில் ஹேமச்சந்திரன் பங்கேற்றார்.
10 சுற்றுகள் கொண்ட தகுதிச் சுற்றில் 3ம் இடம் பிடித்த அவர், தொடர்ந்து நடைபெற்ற பந்தயங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார். முதல் பந்தயத்தில் 3ம் இடத்தில் இருந்து தொடங்கி, இறுதி வரை அதே இடத்தை தக்கவைத்து போடியம் கைப்பற்றினார்.
இரண்டாம் பந்தயத்தில் மீண்டும் 3ம் இடத்தில் தொடங்கி, வெற்றிகரமாக 3ம் இடத்தைப் பிடித்து இந்த சுற்றின் 2வது போடியத்தைப் பெற்றார்.
மூன்றாம் பந்தயத்தில் 4ம் இடத்தில் இருந்து புறப்பட்டு, 2 இடங்கள் முன்னேறி 2-வதாக இலக்கைக் தொட்டார். இருப்பினும், பந்தயத்திற்குப் பிறகு விதிக்கப்பட்ட 10 வினாடி அபராதத்தால் இறுதிப் பட்டியலில் 5ம் இடத்தைப் பிடித்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற 2வது சுற்றில் அறிமுகமான ஹேமச்சந்திரன், ஒரே நாளில் 1, 2, மற்றும் 3-ம் இடங்களைப் பிடித்து அசத்தினார். இதன்மூலம் இந்த அறிமுகப் பருவத்தில் இதுவரை பங்கேற்ற 6 பந்தயங்களில் 5 பந்தயங்களில் போடியம் வென்றுள்ளார்.
இன்னும் 3 பந்தயங்கள் மீதமுள்ள நிலையில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் அவர் 2ம் இடத்தில் நீடிக்கிறார். தேசிய அளவிலான கார் பந்தயத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற முதல் புதுச்சேரி வீரர் ஹேமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேமச்சந்திரன் அடுத்து வரும் 24, 25 தேதிகளில் நடைபெறும் ‘துபாய் கார்ட்ரோம் எண்டியூரன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 2வது சுற்றான துபாய் 700 கி.மீ., பந்தயத்தில் கிரிட் தியரி மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணிக்காகக் களமிறங்குகிறார்.
இதன்மூலம் சர்வதேசப் பந்தய வடிவில் பங்கேற்கும் முதல் புதுச்சேரி வீரர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
ஹேமச்சந்திரன் கூறுகையில், ‘தேசிய மற்றும் சர்வதேசப் பந்தயங்களில் புதுச்சேரியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே எனது இலக்கு. மீதமுள்ள பந்தயங்களில் பங்கேற்று சாம்பியன்ஷிப் வெல்ல ஸ்பான்சர்களைத் தேடி வருகிறேன். எதிர்காலத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், புதுச்சேரி சிறுவர்களுக்கு மோட்டார் விளையாட்டில் பயிற்சி அளிக்கவும் விரும்புகிறேன்’ என்றார்.
