ADDED : ஆக 17, 2026 07:53 PM
புதுச்சேரி: புதுச்சேரி, சோலை நகர் அரசு தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் மற்றும் வழிபாட்டுக் கூடம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, புதிததாக கட்டப்பட்ட வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘அரசு, பள்ளி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகையால், மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படித்து, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் சொல்லைக் கேட்டு உயரிய நிலையை அடைய வேண்டும்’ என்றார்.
அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், கல்வித்துறை இயக்குநர் மோகன்குமார், இணை இயக்குநர் சிவகாமி, துணை இயக்குனர் (பெண் கல்வி) ராமச்சந்திரன், வட்டம்– 1, பள்ளி துணை ஆய்வாளர் அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சீனுவாசன், ஆசிரியர்கள் அவிலா பாத்திமா, வித்யா, ரத்னபிரியா, வசந்தபிரியா, முருகசாமி, ராஜராஜ சோழன், நர்மதா, கஸ்துாரி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
