தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கொட்டித் தீர்த்தது கனமழை

புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கொட்டித் தீர்த்தது கனமழை

புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கொட்டித் தீர்த்தது கனமழை


UPDATED : அக் 26, 2026 12:00 AM

ADDED : அக் 25, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 12:00 AM ADDED : அக் 25, 2026 08:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாகின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழை வெளுத்து வாங்கியது. நேற்று காலையிலும் கனமழை தொடர்ந்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான குடியிருப்புப் பகுதிகளிலும் தண்ணீர் புகுந்தது.

புதுச்சேரியின் முக்கிய சாலைகளான காந்தி வீதி, கிழக்குக் கடற்கரைச் சாலை, புஸ்சி வீதி, தூய்மா வீதி, செயின்ட் தெரேஸ் வீதி, ரெயின்போ நகர் பகுதிகளில் மழைநீர் சாலைகளை மூழ்கடித்தது.

சாலைகளில் வடிந்தோட வேண்டிய மழைநீர் பெருமளவில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

வெள்ளக்காடான சிக்னல்கள்:: புதுச்சேரியின் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சிவாஜி, ராஜிவ், இந்திரா சிக்னல் பகுதிகளிலும் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

வெள்ளநீரில் சிக்கிய சில இருசக்கர வாகனங்கள் பழுதடைந்தன. ஏற்கனவே நகரின் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படும் நிலையில், கனமழையால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் சென்ற வாகன ஓட்டிகள் தடுமாறினர்.

தொடர் கனமழையால் புதுச்சேரி மக்களின் அன்றாடப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். கனமழையால் நகரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் கூடுதல் சிரமத்தைச் சந்தித்தனர்.

வியாபாரம் பாதிப்பு: புதுச்சேரியில் பொதுமக்கள் அதிகம் கூடும் சண்டே மார்க்கெட்டிலும் கனமழையின் தாக்கம் எதிரொலித்தது. நடைபாதை வியாபாரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

கனமழையால் வியாபாரமின்றி காணப்பட்டது. வியாபாரம் முற்றிலும் முடங்கியதால், சிறு வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

மீன் மார்க்கெட்டில் வெள்ளம்: புஸ்சி வீதியில் உள்ள மணிக்கூண்டு மீன் மார்க்கெட்டிலும் வெள்ளநீர் புகுந்ததால், வியாபாரம் பாதித்தது. ஏற்கனவே மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், மார்க்கெட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் வியாபாரிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர்.

கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சாலையோரங்களில் வசிப்பவர்களின் நிலையும் பரிதாபமாக இருந்தது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், டி.வி. நகர், கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதி, புதுப்பேட்டை, பொய்யாகுளம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீடுகளில் தேங்கிய தண்ணீரை பாத்திரங்களால் வெளியேற்றினர்.

வீட்டு உபயோகப் பொருட்கள் நனைந்து சேதமடைந்தன. தொடர்ந்து மழை பெய்ததால் சிலர் தங்கள் வீடுகளில் தங்க முடியாமல் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

இதற்கிடையே, சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகள் மற்றும் பொதுப்பணித் துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். டீசல் இன்ஜின்கள் மூலம் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

கனமழையுடன் கடலும் சீற்றமாகக் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் விசைப்படகுகள் பாதுகாப்பாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

புதுச்சேரியில் 97 மி.மீ.: புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 97 மி.மீ. (9.7 செ.மீ.) மழை பதிவானது. திருக்கனுாரில் 68, பத்துக்கண்ணு பகுதியில் 53, பாகூரில் 34 மி.மீ., மழையும் பதிவாகின.

இன்று விடுமுறை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு இன்று (அக். 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us