ADDED : அக் 26, 2026 08:27 PM

புதுச்சேரி: புதுச்சேரி கடல் திடீரென செம்மண் நிறமாக மாறியது ஏன் என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடல் நீர் மாதிரி சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் பெய்த கன மழை காரணமாக நேற்று (அக்.,25) நகர பகுதி முழுதும் வெள்ளத்தில் தத்தளித்தது. இந்த கனமழையின் தாக்கம் கடலிலும் எதிரொலித்தது. வழக்கமாக நீல நிறத்தில் காட்சியளிக்கும் புதுச்சேரி கடல் நீர், நேற்று திடீரென செந்நிறமாக காட்சியளித்தது, குறிப்பாக, தலைமை செயலகம் எதிரே மற்றும் குருசுக்குப்பம் பகுதிகளில் கடல் செந்நிறமாக மாறியது. இதற்கு, கனமழையால் கரையோரப் பகுதிகளில் இருந்து செம்மண் கடலில் கலந்ததே கடல் நீரின் நிறம் மாறி இருக்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையில், சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தேவநாதன், பிரபு, ஆய்வக அதிகாரிகள் அடங்கிய குழுவினர், இன்று (அக்.,26) செந்நிறமாக நிறமாக மாறிய கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கடல் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், கடல் நீரில் உப்பு தன்மை, அமிலத்தன்மை, கார தன்மை, ஆக்ஸிஜன் அளவு உட்பட அனைத்து காரணிகளிலும் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை.
புதுச்சேரியில் பெய்த கன மழையால் செம்மண் பகுதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு, குருசுக்குப்பம் வாய்க்கால் வழியாக கடலில் கலந்ததான் காரணமாகவே, கடல் நீர் தற்காலிமாக செந்நிறமாக மாறியதும், தற்போது இயல்பு நிலைக்கு நிரம்பி உள்ளதும் தெரியவந்தது.
கடல் நிறம் மாறியதால் கடல்வாழ் உயிரினங்களுக்கோ, மனிதர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் மாசு கட்டுப்பாட்டு குழுமம் தெரிவித்துள்ளது.
