ADDED : ஜன 14, 2024 03:52 AM

புதுச்சேரி என்றாலே அதனுடைய அழகான கடற்கரையும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் மட்டுமே நினைவுக்கு வரும். இவற்றை தாண்டி ரசிக்கப்படும் இன்னொரு இடம் இயற்கை எழில் கொஞ்சும் ஊசுடு ஏரி.
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லையில் 2,125 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள ஊசுடு ஏரிக்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் இனப்பெருக்கத்துக்காக நவம்பர் மாதம் முதல் வருகை தருகின்றன. இதனால், பறவைகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.முக்கியத்துவம் வாய்ந்த ஊசுடு ஏரியில் தேசிய மலரானதாமரை மலர்கள் பூத்து குலுங்கி, தாமரை தடாகமாக ரம்யமாக காட்சியளிக்கிறது.
பூத்து குலுங்கும் தாமரை செடிகளுக்கு இடையில் நீர் கோழிகள் நீந்தி இரை தேடுகின்றன. கூட்டினுள் பசியோடு இருக்கும் குஞ்சுகளுக்காக, பெரிய பறவைகள் முகாமிட்டு, மூழ்கி இரைதேடுவது கொள்ளையழகு.இந்த அழகிய காட்சியை காண அதிகாலையிலும், அந்தி சாயும்போதும் ஊசுடு ஏரியில் சுற்றுலாப் பயணிகளும் குவிந்து வருகின்றனர்.
வனத் துறை ஊழியர்கள் கூறுகையில், 'ஊசுட்டேரியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே, ஆழமான பகுதிகளில் உள்ள தாமரை பூக்களை பறிக்க முயல்வது ஆபத்தானது. ஏரியில் யாரும் இறங்க வேண்டாம். தாமரை பூக்கள் பறிப்பதற்கு அல்ல; ரசிக்க மட்டுமே' என்றனர்.

