/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
/
பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
ADDED : டிச 31, 2025 05:00 AM

புதுச்சேரி: வைகுண்ட ஏகாதசியையொட்டி, புதுச்சேரியில் உள்ள பெருமாள் கோவில்களில், நடந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நாளில், பெருமாள் கோவில்களில் முக்கிய நிகழ்வாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதையொட்டி, புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜபெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், பெருமாள் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமானோர் கோவிந்தா, கோவிந்தா என, முழக்கமிட்டு, தரிசனம் செய்தனர்.
முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள அலமேலு மங்கை சமேத, தென்கலை சீனுவாச பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
ஏகாதசி மண்டபத்தில், சேஷ வாகனத்தில் பெருமாள் சுவாமி, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில், வழுதாவூர் அருகே உள்ள கலிங்கமலை ரங்கநாத பெருமாள் மற்றும் வடகலை வரதராஜ பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
மேலும், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டு, பெருமாள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
வில்லியனுார் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சுவாமிக்கு வைகுந்த வாச அலங்காரம் செய்யப்பட்டு, திரை மூடப்பட்டது.
நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. இதில் எதிர்கட்சி தலைவர் சிவா மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் செய்திருந்தார்.

