ADDED : செப் 28, 2026 07:02 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டு அளிப்பதை உறுதி செய்யும் வகையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடந்தது.
புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சட்டசபை இடைத்தேர்தல் பாதுகாப்பிற்காக புதுச்சேரி வந்துள்ள துணை ராணுவ படையினருடன் போலீசார் பொது அமைதியை நிலைநாட்டுதல், பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது.
அதன்படி, கவுண்டன்பாளையம் தொழிலாளர் துறை அலுவலகம் அருகே துவங்கிய கொடி அணி வகுப்பில் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், நாகராஜன், சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் மற்றும் 50க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் துப்பாக்கி ஏந்தியவாறு கவுண்டன்பாளையம், குண்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்கள் வழியாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.
