ADDED : ஏப் 20, 2025 11:39 AM

புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல் பிரதான பிரச்னையாக உள்ளது. இதற்கு தீர்வு காண, நகரில் நெரிசல் மிகுந்த நேரங்களில் போக்குவரத்து போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசாரை போன்று பைக்குகளில் ரோந்து சென்று, போக்குவரத்தை ஒழுங்கு படுத்த டி.ஜி.பி., உத்தரவிட்டார்.
அதன்பேரில் முதல்கட்டமாக சாலை பாதுகாப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து போக்குவரத்து போலீசாருக்காக சைரன், மைக் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய 10 பைக் வாங்கப்பட்டது. அதில், புதுச்சேரிக்கு 6, காரைக்காலுக்கு 2, ஏனாம், மாகிக்கு தாலா ஒரு பைக் என பிரித்து வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் இந்த பைக் சேவையை கடந்த 28 ம் தேதி டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் துவக்கி வைத்தார். அன்று நகரின் பிரதான சாலைகளில் வலம் வந்த இந்த பைக்குகள் அடுத்த ஓரிரு நாட்களிலேயே போன இடம் தெரியவில்லை.போக்குவரத்து நெரிசலை விரைந்து ஒழுங்குப்படுத்த வாங்கிய பைக்கை, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர போலீஸ் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

