UPDATED : அக் 08, 2026 10:31 PM
ADDED : அக் 08, 2026 09:15 PM
அரியாங்குப்பம்: செம்மண் நிறத்தில் தண்ணீர் வருவதால் பொது மக்கள் கடும் அவதிடைந்து வருகின்றனர்.
புதுச்சேரி நகரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, உப்பு நீர் உட்புகுந்து நீரின் தரம் குறைந்து வருகிறது. நகரப்பகுதிக்கு முத்திரையர்பாளையம், திருக்காஞ்சி ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சோனாம்பாளையம், லாஸ்பேட் பகுதி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும், சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரசு சார்பில் முதலியார்பேட்டை சுதானாநகர் பகுதியில் 39.9 கோடி ரூபாய் மதிப்பில் 20 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. அதற்கு வேல்ராம்பட்டு ஏரிக்கரை, உழந்தை ஏரிக்கரை மற்றும் கிராமப்பகுதிகளில் 11 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, தண்ணீர் கொண்டு வந்து, சுதானா நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மூலம் கடந்த 2024ம் ஆண்டு முதல் வீடுகளுக்கு வினியோம் செய்யப்பட்டு வருகிறது.
இதில், தற்போது செம்மண் நிறத்தில் தண்ணீர் வருகிறது. இதனால், வீடுகளில் வாஷிங்மெஷின், குடிநீர் சுத்திகரிப்பு மிஷின்கள் பழுதடைவதால், பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.
