காரைக்கால் ‘சஸ்பெண்ட்’ எஸ்.பி., மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு
காரைக்கால் ‘சஸ்பெண்ட்’ எஸ்.பி., மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு
UPDATED : அக் 16, 2026 08:50 PM
ADDED : அக் 16, 2026 08:47 PM

காரைக்கால்: காரைக்காலில் பெண் காவலர் பாலியல் விவகாரத்தில் சஸ்பெண்ட் எஸ்.பி., மீது ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் எஸ்.பி.,யாக சுப்ரமணியன் பணியாற்றியபோது அங்கு பணியில் இருந்த திருமணமான 28 வயது பெண் காவலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சுப்ரமணியன் புதுச்சேரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகும், அந்த பெண் காவலரிடம் வீடியோ அழைப்புகளில் பேசி வந்தார். இது அவரது கணவருக்கு தெரிய வந்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து அவரது கணவர் சீனியர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து டி.ஜி.பி., உத்தரவின் பேரில், விசாரணைகுழு அமைக்கப்பட்டு பெண் காவலர் மற்றும் உடன் பணியாற்றிய மகளிர் போலீசார் உள்ளிட்ட பலரை விசாரணை மேற்கொண்டனர். அதில் எஸ்.பி., சுப்ரமணியன் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் கடந்த செப்., 25ம் தேதி அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், காரைக்கால் நகர போலீசார் கடந்த செப்., 29ம் தேதி எஸ்.பி., சுப்ரமணியன் மீது, பெண் காவலருக்கு பாலியல் தொல்லை மற்றும் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர்.
பின், பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இவ்வழக்கு குறித்து நகர போலீசார் எஸ்.பி., சுப்ரமணியனை விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பினர்.
ஆனால் ஒருமுறைக்கூட எஸ்.பி.,யை போலீசார் விசாரிக்கவில்லை. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் காவலரின் தீவிர விசாரணை அறிக்கை அடிப்படையில், எஸ்.பி., சுப்ரமணியன் பாலியல் புகார் வழக்கு, நேற்று மேலும் கடுமையான பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளது.
இதில், சாதாரண பாலியல் தொல்லை வழக்காக தொடங்கிய வழக்கு, தற்போது பதவியை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தல் (64(2)), மிரட்டி பணம் பறித்தல் (308-6), தாக்குதல் (118-1), கொலை மிரட்டல் (351-3) மற்றும் ஆபாச படம் பரப்புதல் (67-A IT Act) உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் நகர போலீசார் எஸ்.பி., சுப்ரமணியன் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
