/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
/
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
ADDED : டிச 11, 2025 05:15 AM

திருக்கனுார்: கூனிச்சம்பட்டில் பைக்குகள் மோதிக்கொண்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்ட பெயிண்டர் இறந்ததால், குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி, அப்பகுதி மக்கள் நேற்று போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டைச் சேர்ந்தவர் விநாயகம், 40; பெயிண்டர். இவர் கடந்த 6ம் தேதி இரவு, அப்பகுதி சங்கராபரணி ஆற்றங்கரைக்கு பைக்கில் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, திருக்கனுாரில் இருந்து தமிழகப் பகுதியான ஐவேலிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த பிரதீப், அவரது நண்பர்களான ஐ.ஆர்.பி.என்., போலீஸ் வீரமணி மற்றும் வசந்தகுமார் ஆகியோர், விநாயகம் ஓட்டி வந்த பைக் மீது மோதினர்.இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், பிரதீப், வீரமணி, வசந்தகுமார் ஆகியோர், விநாயகத்தை திட்டியதுடன், கல்லால் தாக்கினர்.தலையில் படுகாயமடைந்த விநாயகத்தை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஜிப்மரில் அனுமதித்தனர்.
புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார், ஐ.ஆர்.பி.என். போலீஸ் வீரமணி, வசந்தகுமார், பிரதீப் ஆகியோர் மீது கொலை முயற்சி, எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு பிரிவு உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட விநாயகம் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9:00 மணி அளவில் திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, ஸ்டேஷன் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த எஸ்.பி., சுப்ரமணியன், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பெயிண்டரை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். அதுவரை விநாயகம் உடலை பிரேத பரிசோதனை செய்ய கூடாது என, வலியுறுத்தினர்.
இதையடுத்து, எஸ்.பி., குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பிரேத பரிசோதனைக்கு பிறகு, கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றப்படும் என, உறுதியளித்தார். இதையடுத்து, 11:00 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால், திருக்கனுார்- விழுப்புரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

