தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் சரி்ந்த ஓட்டுப்பதிவு

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் சரி்ந்த ஓட்டுப்பதிவு

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் சரி்ந்த ஓட்டுப்பதிவு


UPDATED : அக் 07, 2026 01:41 AM

ADDED : அக் 07, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 01:41 AM ADDED : அக் 07, 2026 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், கடந்த பொதுத் தேர்தலை விட ஓட்டுப்பதிவு சதவீதம் கணிசமாக் குறைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தட்டாஞ்சாவடி சட்டசபை பொதுத் தேர்தலில் 87.10 சதவீத ஓட்டுகள் பதிவாகியிருந்தன. தற்போது இடைத்தேர்தலில் 80.81 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது கடந்த தேர்தலை விட 6.29 சதவிகிதம் குறைவு.

ஆண்களை விடப் பெண்களே அதிக எண்ணிக்கையில் ஓட்டுப் பதிவு செய்துள்ளனர்.

முதல்வர் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டபோதே, தட்டாஞ்சாவடியில் இடைத்தேர்தல் வரும் என்பதை அரசியல் கட்சிகள் எதிர்பார்த்திருந்தன. இதனால் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே வேட்பாளர்கள் களமிறங்கி, பணத்தையும் பரிசுகளையும் தாராளமாக வழங்கி வாக்காளர்களைக் குஷிப்படுத்தினர்.

இம்முறை ஓட்டுப்பதிவு சதவீதம் புதிய உச்சத்தை தொடும்; தங்களுக்கும் ஓட்டுகள் விழும் என அனைத்துக் கட்சிகளும் எதிர்பார்த்திருந்தன. ஆனால், தேர்தல் முடிவில் ஓட்டு சதவீதம் குறைந்தது அரசியல் தலைவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைஅளித்துள்ளது.

வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை கையாண்டு பரிசுகளையும் கையாண்ட போதிலும், ஓட்டுகள் குறைந்ததன் பின்னணியில் பல வலுவான காரணங்கள் இருக்கிறது. ஓட்டுப் பதிவு குறைந்ததற்கான முதன்மைச் காரணங்கள் அரசியல் கட்சியினரும் பல்வேறு கள நிலவரங்களை சுட்டிக்காட்டினர்.

முதலாவது காரணம், தேர்தல் ஆணையம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவித்திருந்தாலும், அது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு. தட்டாஞ்சாவடி தொகுதியிலுள்ள தொழிற்பேட்டைகளுக்கும் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் தொகுதிக்கு வெளியே உள்ள ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியதால், அவர்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இவர்கள் இடைத்தேர்தலில் ஓட்டுப்போடவில்லை.

இரண்டாவது காரணம் வெளியூர் வாழ் இளைஞர்கள். பெங்களூரு போன்ற வெளிமாநில நகரங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்கு விடுமுறை கிடைக்காததாலும், ஒரே நாளில் வந்து ஓட்டுப்போட்டுவிட்டுச் செல்வதில் உள்ள பயணக் களைப்பு காரணமாகவும் அவர்கள் ஓட்டுப்போடுவதை தவிர்த்துவிட்டனர்.

மூன்றாவது முக்கிய காரணம், வார நாட்களில் ஓட்டுப்பதிவு வைக்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் ஓட்டுப்பதிவை வைக்க வேண்டும் என, அரசியல் கட்சிகள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தன. ஆனால், தேர்தல் ஆணையம் அதனைப் பரிசீலிக்கவில்லை.

வாரநாளில் ஓட்டுப்பதிவு நடந்ததால், வாக்காளர்களைக் கவனித்தால் கூட ஓட்டுச்சாவடி பக்கம் வராமல் சொந்த வேலைகளையும் தொழிலையும் பார்க்கச் சென்றுவிட்டனர்.

நான்காவது வாக்காளர்களின் சலிப்பு உணர்வு. சமீபத்தில் தானே ஓட்டுப்போட்டோம், மீண்டும் ஓட்டுப்போட வேண்டுமா? என்ற சலிப்பு நிலையும் காணப்பட்டது. இந்த இடைத்தேர்தலை விரும்பாமல் சிலர் ஓட்டுப்போடவில்லை.

ஐந்தாவது காரணம் சுட்டெரித்த கத்தரி வெயில். காலை 9 மணிக்கே வெயில் சுளீரென்று அடித்ததால் ஓட்டுச்சாவடி பக்கம் வரவில்லை. நேரம் போக வெயிலும் அதிகமாக இருந்தது.

குறிப்பாக வயதானவர்கள் கடும் சிரமங்களை சந்தித்தனர். இதன் காரணமாகவும் ஓட்டு பதிவு சரிந்தது என்று நடைமுறை காரணங்களை அடுக்கின்றனர் அரசியல் கட்சி நிர்வாகிகள்.

அரசியல் கட்சிகள் வாரி வழங்கிய கவனிப்புகளையும் மீறி, நடைமுறைச் சிக்கல்களும், விடுமுறையின்மையும், வாக்காளர்களின் மனச்சலிப்புமே தட்டாஞ்சாவடியில் ஓட்டுச் சரிவுக்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளன.

இனிவரும் தேர்தல்களில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கத் தேர்தல் ஆணையம் வார இறுதி நாட்களில் தேர்தலை நடத்துவதுடன், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஓட்டளிப்பதை உறுதிசெய்யும் கடுமையான நடைமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us