/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் வேலைநிறுத்தம் பஸ்கள் இயங்காததால் மக்கள் அவதி
/
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் வேலைநிறுத்தம் பஸ்கள் இயங்காததால் மக்கள் அவதி
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் வேலைநிறுத்தம் பஸ்கள் இயங்காததால் மக்கள் அவதி
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் வேலைநிறுத்தம் பஸ்கள் இயங்காததால் மக்கள் அவதி
ADDED : ஜூலை 29, 2025 05:04 AM

புதுச்சேரி : பணி நிரந்தரம் செய்ய கோரி, பி.ஆர்.டி.சி., சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட நடவடிக்கை குழு சார்பில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
புதுச்சேரி, சாலை போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 80 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 562 பணியிடங்களில் தற்போது 225 நிரந்தர ஊழியர்களும், 255 ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், நிரந்தர ஊழியர்கள் 7 வது ஊதியக்குழுவை அமல்படுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து நடவடிக்கை எடுப்பதாக அரசு உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், நிர்வாகம் பேச்சுவார்த்தையில் கூறியபடி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தொடர் போராட்டங்களை நடத்தியும் பயன் இல்லாததால் கூட்டு போராட்டக்குழுவினர் நேற்று அதிகாலை 3:00 மணி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், புதுச்சேரியில் உள்ள 50 பஸ்களும், காரைக்காலில் உள்ள 23 பஸ்கள் முழுமையாக இயங்கவில்லை.
வேலை நிறுத்த போராட்டத்தால் ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தமிழக அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கியதால், நகரப் பகுதியில் பெரிய அளவில் பாதிப்பிலை என்றாலும், கிராமப்பகுதி மக்கள், பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயங்காததால் பெரும் அவதிக்குள்ளாகினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை, எதிர்க்கட்சி தலைவர் சிவா, சம்பத் எம்.எல்.ஏ., ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும், இப்பிரச்னை குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அப்போது, கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.