தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/2 மணி நேர மழைக்கே திணறிய புதுச்சேரி: சென்னையை பார்த்து பாடம் கற்றுக்கொள்ளுவது அவசியம்

2 மணி நேர மழைக்கே திணறிய புதுச்சேரி: சென்னையை பார்த்து பாடம் கற்றுக்கொள்ளுவது அவசியம்

2 மணி நேர மழைக்கே திணறிய புதுச்சேரி: சென்னையை பார்த்து பாடம் கற்றுக்கொள்ளுவது அவசியம்

1


ADDED : அக் 18, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 05:21 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னையில் கொட்டி தீர்த்த அதி கனமழை புதுச்சேரிக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. மக்களை காக்க, போர்க்கால அடிப்படையில் புதுச்சேரி அரசு முன் ஏற்பாடுகளை முடுக்கிவிட வேண்டும்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, உலுக்கி எடுக்கத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் நேற்று முன்தினம் (அக்.17 ம்தேதி) இரவு வெறும் இரண்டு மணி நேரத்தில் 9.6 செ.மீ., அளவு கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதுடன், ரெயின்போ நகர் மற்றும் கிருஷ்ணா நகர் போன்ற தாழ்வான பகுதிகள் முற்றிலும் வெள்ளக்காடாக மாறின.

குறுகிய நேரத்தில் பெய்த இந்த மழையையே எதிர்கொள்ள முடியாமல் நகராட்சிகள், பொதுப்பணித் துறை திணறியதுடன், வெள்ளநீரை வெளியேற்ற முடியாமல் தவித்த நிலை நிலவியது. இதன் காரணமாக, அப்பகுதி எம்.எல்.ஏ.க்களே நேரடியாக களத்தில் இறங்கி வெள்ள நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

இந்தச் சம்பவம் புதுச்சேரியின் தற்போதைய மழைநீர் வடிகால் கட்டமைப்பு மற்றும் அவசரகால ஏற்பாடுகள் குறித்து பல்வேறு பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை கற்பனைக்கும் எட்டாத வகையில் பேரழிவை ஏற்படுத்தியது. நகரின் முக்கிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்குள் 15 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது.

பாரிமுனையில் அதிகபட்சமாக 36 செ.மீ. வரை மழை பதிவானதுடன், கத்திவாக்கம், மீனம்பாக்கம், சென்னை சென்ட்ரல், திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் உள்ளிட்ட ஆறு முக்கிய பகுதிகளில் 20 செ.மீ.,கும் அதிகமான மழை பதிவானது.

தமிழகத்தில் தானே கனமழை பெய்கிறது; நமக்கு என்ன? என்று புதுச்சேரி அரசு ஒருபோதும் அலட்சியமாக இருக்க முடியாது. இதுபோன்று புதுச்சேரியில் பேய் மழை கொட்டினால் என்ன ஆவது.

சென்னையில் கொட்டிய இந்த கனமழை புதுச்சேரி அரசுக்கு மிக முக்கியமான ஒரு பாடம். சென்னையில் பெய்ந்துள்ள கனமழையானது வழக்கமான புயல் அல்லது மேக வெடிப்பினால் உருவானது அல்ல.

எல் நினோ போன்ற உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் காரணமாக எந்தப் பகுதியில், எந்த நேரத்தில், எவ்வளவு மழை கொட்டும் என்பதைத் துல்லியமாக முன்கூட்டியே கணிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அப்படி தான் சென்னையில் அதி கனமழை கொட்டி வெள்ளக்காடாக்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழை வரும் வாரங்களில் மேலும் தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையின் துயரத்தைப் பார்த்து புதுச்சேரி அரசு உடனடியாக விழித்துக்கொண்டு பாடம் கற்க வேண்டும்.

புதுச்சேரி அரசு உடனடியாக அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.

புதுச்சேரியில் அதி கனமழை பெய்தால் எந்தெந்த பகுதிகள் உடனடியாக வெள்ளத்தில் மூழ்கும் என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து, அப்பகுதிகளுக்கு முதற்கட்டமாக கவனம் செலுத்த வேண்டும். நகரின் அனைத்து முக்கிய வாய்க்கால்களையும் உடனடியாகத் துார்வாரி, நீர் தங்கு தடையின்றி கடலை நோக்கிச் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

வெள்ளநீரை உடனடியாக வெளியேற்றப் போதுமான எண்ணிக்கையிலான மோட்டார்கள், மின் மோட்டார் பம்புகள் மற்றும் மரம் வெட்டும் கருவிகள் போன்ற அவசரகால உபகரணங்கள் அனைத்தும் அந்தந்தப் பகுதிகளில் எப்போதும் பயன்பாட்டுக்குத் தயாராக இருப்பதை பேரிடர் மேலாண்மைத்துறை உறுதி செய்ய வேண்டும்.

இயற்கை பேரிடர்களை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது; ஆனால், சரியான திட்டமிடலும், போர்க்கால நடவடிக்கைகளும் மட்டுமே மனித இழப்புகளையும், பொருள் சேதங்களையும் பெருமளவு குறைக்கலாம். இனியாவது புதுச்சேரி அரசு விழித்துக்கொண்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாகச் செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us