ADDED : ஜன 02, 2026 04:54 AM

புதுச்சேரி: பாரத பண்பாட்டு அமைப்பான வேதபாரதி சார்பில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று மார்கழி மாத பஜனை நடைபெற்றது.
நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை காத்திடும் பொருட்டும், அடுத்த தலைமுறையினரை நெறிப்படுத்தும் வகையில் வேதபாரதி அமைப்பு, புதுச்சேரியில் கடந்த 7 ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் வீதி பஜனை மற்றும் ராதா மாதவ திருக்கல்யாண வைபவம் நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 8ம் ஆண்டு மார்கழி மாத பஜனை வீதியுலா நேற்று நடந்தது.
புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து காலை 6:00 மணிக்கு பஜனை வீதியுலா துவங்கியது.
வேதபாரதியின் பாகவதர்கள் தோடய மங்கலம் பாட, தொடர்ந்து சங்கர வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகளின் வேதபாராயணம், பஜனை, கோலாட்டம், கும்மியாட்டம், பரதம், திருப்பாவை, திருவெம்பாவையுடன் மாட வீதிகளில் பஜனை நடைபெற்றது.
வீதி பஜனையை வேதபாரதி பஜனோத்ஸவ கமிட்டி தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை புதுச்சேரி வேதபாரதி தலைவர் பட்டாபிராமன், பொதுச் செயலாளர் நடராஜன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

