UPDATED : நவ 17, 2026 11:09 PM
ADDED : நவ 17, 2026 11:06 PM

புதுச்சேரி: இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு மற்றும் தேசிய தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவன தலைமை இயக்குநர் பூனம் சின்ஹா ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொழில்முனைவோர் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் திறன் உருவாக்கத்தை வலுப்படுத்துவதே இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் கீழ் பயிற்றுநர்களுக்குப் தொழில்முனைவோர் பாடத்திட்டங்களை உருவாக்குதல், குழும மேம்பாடு, தொழில்முனைவுக்கான வாய்ப்புகளைக் கண்டறிதல், பயிலரங்குகள் நடத்துதல், தொழில் நிறுவனங்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு முன் முயற்சிகள் மூலம் அடைகாப்பு ஆதரவு வழங்குதல், ஆசிரியர்கள் மற்றும் பாட வடிவமைப்புகளைப் பரிமாறிக்கொள்ளுதல், பயிற்சி பெறுவோரிடையே சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நிகழ்ச்சயில், இயக்குநர் தரணிகரசு, பேராசிரியர் நடராஜன், பல்கலைக்கழக நுாலகர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
