அரசு உதவி பெறும் பள்ளியில் மழை நீர் தேக்கம்: மாணவர்கள் அவதி
அரசு உதவி பெறும் பள்ளியில் மழை நீர் தேக்கம்: மாணவர்கள் அவதி
UPDATED : நவ 10, 2026 10:32 AM
ADDED : நவ 10, 2026 10:28 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மைதானத்தில் தேங்கிய மழை நீரை மோட்டார் பம்பு மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கருவடிக்குப்பம் பாத்திமா பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால்,இந்த பள்ளியில் வருடம் தோறும் மழை நீர் தேங்கும் பிரச்னை நீடித்து வருகிறது. பள்ளியின் வெளிப்புறத்தில் உள்ள வடிகால்கள் துர்ந்து போனதால், மழைநீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல், பள்ளியிலேயே தேங்கி விடுகிறது.
இதனால் மாணவர்கள் பள்ளி மைதானத்தை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். தேங்கிய நீரை மோட்டார் பம்ப் மூலம் பள்ளி சார்பில் வெளியேற்றி வருகின்றனர். இதனால் பல ஆயிரம் கன அடி நீர், வீணாக கழிவு நீர் வாய்க்காலுக்கு செல்கிறது. அரசு உதவி பெறும் பள்ளியான இந்த பள்ளி வளாகத்தில் அரசு சார்பில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து கொடுத்து, இந்த நீரை சேமிக்க வழிவகை செய்தால், நிலத்தடி நீரும் மேம்படும், மாணவர்களும் அவதி அடையாமல் நிம்மதியாக இருப்பார்கள் கல்வித்துறை அதிகாரிகள் இதை கவனிக்க வேண்டும்.
