/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இன்றி கட்டப்பட்டு வரும் ராஜிவ் பஸ் நிலையம்
/
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இன்றி கட்டப்பட்டு வரும் ராஜிவ் பஸ் நிலையம்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இன்றி கட்டப்பட்டு வரும் ராஜிவ் பஸ் நிலையம்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இன்றி கட்டப்பட்டு வரும் ராஜிவ் பஸ் நிலையம்
ADDED : நவ 13, 2024 05:39 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் பஸ் நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுச்சேரியில் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மழைநீரை சேகரிக்க, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போதிய கட்டமைப்புகள் இல்லை. இதை அரசு நிர்வாகம் முறையாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வது கிடையாது.
தற்போது, மறைமலை அடிகள் சாலை, ராஜிவ் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 'ஸ்மார்ட்' சிட்டி திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு, ரூ.29 கோடி செலவில் பணிகள் நடந்து வருகின்றன.
பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், விரைவில் பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் அந்த பஸ் நிலையத்தில் தற்போது வரை மழைநீர் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தவில்லை.
நகரின் பிரதான பஸ் நிலையத்திலேயே, மழைநீரை சேகரிப்பதற்கான வழி வகைகளை ஏற்படுத்தாமல், பொதுமக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை அரசு எப்படி ஏற்படுத்த போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'ஆண்டுதோறும் பருவ காலங்களில் பெய்யும் மழை நீர் வீணாவதால் கடல் நீர் நிலத்தடியில் உட்புகுந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. இதை தடுப்பதற்கான நடவடிக்கையில், அரசு மெத்தனம் காட்டி வருகிறது.
சில மாதங்களுக்கு முன் வடகிழக்கு பருவமழையை சேகரிப்பது குறித்து அரசின் பல்வேறு துறைகள் இணைந்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஆனால் தற்போது வரை நகரப்பகுதிகளில் போதிய அளவில் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. பஸ் நிலையத்தில் கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.