இடைத் தேர்தலுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்... தயார்:சின்னம் பொருத்தும் பணி முடிந்து சீல் வைப்பு
இடைத் தேர்தலுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்... தயார்:சின்னம் பொருத்தும் பணி முடிந்து சீல் வைப்பு
UPDATED : செப் 26, 2026 05:49 AM
ADDED : செப் 25, 2026 09:02 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்லில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது. இதனை தொடர்ந்து, ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் என, இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 7 ம் தேதி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அக்., 6ம் தேதி நடக்கும் அறிவிக்கப்பட்டது.
பின் 9ம் தேதி தேர்தல் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு, வேட்பு மனு தாக்கல் துவங்கியது. காங்., சார்பில் விநாயகம், என்.ஆர்.காங்., அசோக் ஆனந்த், தி.மு.க., சேதுசெல்வம், இந்திய கம்யூ., சலீம், இந்திய குடியரசு கட்சி கலைவாணன், நா.த.க., கார்த்திகுமாரி, ஐந்து சுயேச்சைகள் உட்பட 14 பேர் மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்கள் பரிசீலனைக்குப் பின் பிரதான கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் மற்றும் கார்த்திகுமாரி தாக்கல் செய்த இரண்ட மனுக்களில் ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 11 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டபின், இரண்டாம் முறை தற்செயல் கலப்பு முறை நடந்தது. பின் பாதுகாப்பாக ரெட்டியார்பாளையம் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டன.
தொடர்ந்து, ஓட்டுபதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது. இதற்காக நேற்று காலை 7:00 மணிக்கு ரெட்டியார்பாளையத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களின் முன்னிலையில் லாஸ்பேட்டை மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின், வேட்பாளர்கள் பெயர்கள், வரிசை எண் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் அச்சிடப்பட்ட சீட்டுகள் பொருத்தும் பணி நடந்தது.
மாதிரி ஓட்டுப் பதிவு:: சின்னங்கள் பொருத்தும் பணி முடிந்ததும், இயந்திரங்கள் துல்லியமாக செயல்படுவதை உறுதிப்படுத்த மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் முன்னிலையில், ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடு பரிசோதிக்கப்பட்டது. பின், பதிவான ஓட்டுகள் அழிக்கப்பட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் விவபேட் இயந்திரங்கள், அனைத்தும் மோதிலால் தொழில்நுட்ப கல்லுாரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், வரும் 6ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும்.
