/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தளர்வுநிலை பயிற்சிகள் செய்முறை...
/
தளர்வுநிலை பயிற்சிகள் செய்முறை...
ADDED : நவ 27, 2025 04:31 AM

கடந்த வாரம் பார்த்த தளர்வு நிலைப் பயிற்சியில், காயக்கிரியை முறையை இந்த வாரம் பார்ப்போம்...
காயக்கிரியை என்பது விசை இயக்க இயலின் அடிப்படையில் நம் உடலை உற்சாகத்துடன் புதுப்பிக்கம் ஒரு யோகத்தின் யுக்தி ஆகும். சமஸ்கிருதத்தில் 'காய' என்றால் 'உடல்' என்றும், 'கிரியை' என்றால் சுவாசம் கூடிய உடலின் வேகமான அசைவுகள் என்று பொருள்.
செய்முறை ஷவாசனம் நிலையில் படுத்துக் கொள்ளவும். இந்நிலையில் தலை எப்பொழுதும் வடக்கு நோக்கியே இருக்க வேண்டும். நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும், ஒரு விதமான துருவ நோக்குடன் அமைந்திருக்கும். நம் உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் அல்லது வியாதியினால் இந்த துருவ அமைப்பு பாதிக்கப்படுகிறது. இவ்வகை பாதிப்பினால் நாம் அனாவசியமாக நம் சக்தியை இழக்க நேரிடுகிறது. எனவே எந்த ஒரு கடின உழைப்போ பயிற்சிக்கு பிறகு இந்த பாதிக்கப்பட்ட துருவ நோக்கை மாற்றி சீர்படுத்த வேண்டும். இது நம் யோகத்தின் பயிற்சியான இந்த காயக்கிரியையில் முழுவதுமாக மாற்றியமைத்து, பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.
முதல் பாகம் கால்களுக்கு இடையே போதிய இடைவெளி கொடுத்து படுக்கவும். ஆழ்ந்த நீண்ட ஆத்ம பிராணாயாமத்தில் உள்ள கீழ் மார்பு சுவாசத்துடன் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே கால்களை உட்பக்கமாக கால் கட்டை விரல்கள் தரையில் படும்படி திருப்ப வேண்டும். பின், மூச்சை வெளியிட்டுக் கொண்டே கால்களை வெளிப்பக்கமாக சுண்டு விரல்கள் தரையில் படும்படி திருப்ப வேண்டும். பின், பூரணமாக உடலை தளர்த்தி ஓய்வெடுக்க வேண்டும்.
இரண்டாம் பாகம் இது, முதல் பாகத்தில் காலால் செய்த கிரியைக்கு நேர்மாறானது. உள்ளங்கைகள் தொடைகளை பக்கவாட்டில் தொடும்படி நிலையில் இப்பயிற்சியை தொடங்க வேண்டும். மத்ம பிராணாயாமத்தில் செய்வது போல் நடுமார்பு பகுதி நிரம்பும் வண்ணம் நீண்டு ஆழ்ந்து சுவாசித்தபடி கைகளை துாக்காமல், தரையில் சுழற்றியபடி வெளிநோக்கி திருப்ப வேண்டும். பின், சுவாசத்தை வெளியிட்டபடி கைகளை மீண்டும் தரையில் சுழற்றியபடி உள்ளங்கை தொடையை தொட வேண்டும். இந்நிலையை அடைய நம் தோள்பட்டைகளை தரையில் இருந்து நன்கு மேலே துாக்க வேண்டும். முடிந்த பின் சற்று நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
மூன்றாம் பாகம் மேல்மார்பின் மூச்சு சுவாசித்தபடி, ஆழ்ந்தும், மெதுவாகவும், தலையை மட்டும் இருபுறமும் மாறி, மாறி பொருமையாக திருப்ப வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தபடி தலையை மெதுவாக வலது புறம் முடிந்தவரை திருப்ப வேண்டும். பிறகு சுவாசத்தை வெளியிட்டபடி தலையை இடதுபுறமாக திருப்ப வேண்டும். இதேபோன்று 9 முறை செய்து முடித்த பின், தலையை நேராக வைத்து அனைத்து அழுத்தங்களும் போகும் வரை ஓய்வெடுக்கவும்.
நான்காம் பாகம் நுரையீரலின் கீழ், நடு, மேல் ஆகிய மூன்று பகுதிகளில் சுவாசம் செல்லும்படி முழுமையாக ஆழ்ந்து சுவாசித்து மகாத்யோக பிராணாமம் செய்ய வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்து நுரையீரலின் கீழ்பகுதி நிரம்பும் பொழுது கால்களை உள்நோக்கி திருப்பி, நடுப்பகுதி நிரம்பும்போது கைகளை வெளிப்பக்கமாக திருப்பி, மேல்பகுதி நிரம்பும்போது தலையை வலப்பக்கம் திருப்ப வேண்டும்.
இதேபோன்று நுரையீரலின் கீழ் பகுதியில் இருந்து சவாசத்தை வெளியிட்டபடி கால்களை சுண்டுவிரல் தரையை தொடும்வரை வெளிப்பக்கமாக திருப்பவும். நடுப்பகுதியில் இருந்து சுவாசத்தை வெளியிட்டபடி கைகளை உள்பக்கமாக திருப்பி, உள்ளங்கை தொடையை தொடும் வரை திருப்பவும். மேல்பகுதியில் இருந்து சுவாசத்தை வெளியிட்டபடி தலையை இடதுபக்கமாக திருப்பவும். இந்த மும்முனை செயல்களை 9 சுற்றுகள் தொடர்ந்து செய்து முடித்தபின், பூரணமான தளர்வு நிலையில் ஓய்வெடுக்கவும்.
இவற்றை செய்து முடித்தபின் உடல் சோர்வும், அழுத்தமும் குறையவில்லை என்றால், இந்த வரிசையை சேர்ந்த அனைத்து பாகங்களையும் திரும்ப ஓரிரு முறை திரும்ப செய்யலாம். அதன்பின் நரம்பு மண்டலம் பூரணமாக இணங்கி அமைதி பெறும்.
பயிற்சி நிறைவாக்கும் முன் தொடக்கத்தில் செய்ததுபோல், நீண்ட ஆழ்ந்த சுவாசத்தடன் உடலை நனகு நீட்டி விடவும். பின் முகம் தரை நோக்கிய நிலைக்கு திரும்பவும். உடலை துாக்கி நான்கு கால்களில் உடலை சமநிலைப்படுத்தி, பின் முட்டிக்கால் போட்டு அமரவும். காயக்கிரியை செய்வதற்கு உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்துவது மிக அவசியம். அதுவே நமக்கு பின்னர் கைகூடிய பலன்களைத் தரும்.

