இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம்: பா.ஜ., கோரிக்கை
இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம்: பா.ஜ., கோரிக்கை
ADDED : செப் 28, 2026 05:31 PM
புதுச்சேரி: கடற்கரையில் மின்கம்பம் விழுந்து இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் அறிக்கை:
கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அனைவரின் இதயத்தையும் சுக்குநுாறாக்கியிருக்கிறது. அந்த குடும்பம் அனுபவித்து வரும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இது திட்டமிட்டு நடந்த சம்பவம் அல்ல என்றாலும், சம்பந்தப்பட்ட துறைகள் முறையாக ஆய்வு செய்து, உரிய பராமரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இதுபோன்ற துயரத்தை தவிர்த்திருக்கலாம்.
தங்கள் குழந்தையை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு எத்தனை இழப்பீடு வழங்கினாலும் ஏற்பட்ட பேரிழப்பை ஈடு செய்ய முடியாது. இருப்பினும், அந்த குடும்பத்தின் துயரத்தை ஓரளவு தாங்கி கொள்ளும் வகையில் அரசு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என பா.ஜ., சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அரசு இச்சம்பவத்தை ஒரு முக்கிய எச்சரிக்கையாக கருதி, இனிவரும் காலங்களில் இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
