ADDED : செப் 28, 2026 05:47 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் நடந்த, நுகர்வோர் மக்கள் நீதிமன்றத்தில், 4 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 1 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.
புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில், நுகர்வோர் மக்கள் நீதிமன்றம் நிகழ்வு நடந்தது. மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்குகளின் மீது விசாரணை நடத்தியது. இதில், மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்திலிருந்து 15 வழக்குகள் சமாதானத்திற்கானது என கண்டறியப்பட்டு, அவ்வழக்குகளில் பேச்சு வார்த்தைக்கு உட்படுத்தப்பட்டு, 4 வழக்குகள் உடன்படிக்கை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி யஷ்வந்த்ராவ் இங்கர்சால், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உத்தரவு நகல்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார். புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆனந்தன், சுரேஷ்குமார், சுபஸ்ரீ, ஸ்ரீராம், அய்யப்பன், இளங்கோவன், ரவி, வசந்தகுமார், புதுச்சேரி சட்டக் கல்லுாரி மாணவர்கள், வழக்காளிகள், காப்பீட்டு நிறுவனம், பொதுத்துறை வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மக்கள் நீதிமன்றம் மூலம், 1 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய், முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, நுகர்வோர் குறை தீர்வு ஆணைய பதிவாளர் விஜயா ரவிந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
