சாலை தடுப்பு கட்டைகளில் இடைவெளியால் தொடரும் விபத்து
சாலை தடுப்பு கட்டைகளில் இடைவெளியால் தொடரும் விபத்து
ADDED : ஆக 26, 2026 11:54 PM
புதுச்சேரி, ஆக. 27–விழுப்புரம் சாலையில் தடுப்பு கட்டைகளில் அதிகப்படியான இடைவெளிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க இந்திரா சதுக்கம் முதல் தென்னல் வரை சாலை நடுவில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் முக்கிய சந்திப்புகள் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைக்காக தடுப்பு கட்டைகள் நடுவில் இடைவெளி விடப்பட்டுள்ளது. ஆனால் இந்திரா சதுக்கம் முதல் மூலக்குளம் வரை உள்ள 2 கி.மீ., துாரத்தில் 32 இடைவெளிகள் உள்ளன.
இதனால் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இடைவெளியில் திரும்பும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. மேலும், எதிர் திசையில் வேகமாக வரும் வாகனங்கள் திரும்பும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தவிர்க்க அத்தியாவசிய மற்றும் முக்கிய இடங்களில் மட்டும் இடைவெளி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
