/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரவிந்தர் ஆசிரமம் அருகே சாலை ஆக்கிரமிப்பு; தள்ளுவண்டி கடைக்காரர்கள் அட்டூழியம்
/
அரவிந்தர் ஆசிரமம் அருகே சாலை ஆக்கிரமிப்பு; தள்ளுவண்டி கடைக்காரர்கள் அட்டூழியம்
அரவிந்தர் ஆசிரமம் அருகே சாலை ஆக்கிரமிப்பு; தள்ளுவண்டி கடைக்காரர்கள் அட்டூழியம்
அரவிந்தர் ஆசிரமம் அருகே சாலை ஆக்கிரமிப்பு; தள்ளுவண்டி கடைக்காரர்கள் அட்டூழியம்
UPDATED : ஜூலை 19, 2025 08:13 AM
ADDED : ஜூலை 19, 2025 02:18 AM

புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமம் அருகே சாலையை ஆக்கிரமித்து சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு செய்யும் தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தி வேண்டும்.
புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் மணக்குள விநாயகர் கோவில், கடற்கரை சாலை, பாரதி பூங்கா, அருங்காட்சியகம் என, முக்கிய சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன. இந்த இடங்களை காண, ஆயிரக்கணக்கான உள்ளூர் வெளியூர் சுற்றுலா பயணிகள் தினமும் வருகின்றனர். அவர்கள், அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தரை தரிசிக்காமல் செல்வதில்லை.
ஆனால், அரவிந்தர் ஆசிரமத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏன் இங்கு வந்தோம் என, நொந்துபோகும் அளவிற்கு தள்ளுவண்டி கடைகளின் அடாவடிதனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளை இருபுறமும் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்து, சுற்றுலாப் பயணிகளுக்கு தொல்லை தருகின்றனர்.
குறிப்பாக, மரைன் வீதி, மணக்குள விநாயகர் கோவில் வீதிகளில் புற்றீசல்போல் முளைத்துள்ள இளநீர், தொப்பி, அலங்கார தள்ளுவண்டி கடைகள் கொஞ்சம் கூட போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை.
பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு வழி விடுவதில்லை. கனிவாகவும் சுற்றுலா பயணிகளிடம் பேசுவதில்லை.
நடுவழியில் தள்ளுவண்டி கடைகளை நிறுத்தி கூவி, கூவி வியாபாரம் செய்கின்றனர். இந்த அடாவடியை யாராவது தட்டி கேட்டால் அவ்வளவு தான். அவர்களை சூழ்ந்து தள்ளுவண்டி கும்பல் அடிக்க பாய்கிறது. கொலை மிரட்டலும் விடுகிறது.
தள்ளுவண்டி கடைகள் அட்டூழியத்தால் சுற்றுலா பயணிகள் மிரட்சியுடன், அங்கிருந்து தப்பி, தலைதெறிக்க ஓடுகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ளது. சுற்றுலா பயணிகளால் தான் மாநிலத்திற்கும் வருமானம் வருகிறது என, அரசும் கூறி வருகிறது. அதை கெடுக்கும் விதத்திலும், மாநிலத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் விதத்தில் தள்ளுவண்டிகளின் அடாவடி செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் இப்படி தான் அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில் வீதிகளில் தள்ளுவண்டிகள் புற்றீசல்போல் முளைத்தன. சுற்றுலா பயணிகளுக்கு இடையூராக இருந்ததால் அவை அகற்றப்பட்டு, செஞ்சி சாலையில் இடம் ஒதுக்கப்பட்டன. அங்கு பொருட்களை விற்க கடைகளும் தரப்பட்டன.
ஆனால், அவற்றையெல்லாம் உள்வாடகைக்கு விட்டுவிட்டு தற்போது மீண்டும் அரவிந்தர் ஆசிரமம், மரைன் வீதி, மணக்குள விநாயகர் கோவில் தெருக்களில் ஆளுக்கு ஐந்து ஆறு தள்ளு வண்டிகளை நிறுத்தி வியாபாரம் என்ற போர்வையில் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இதனை புதுச்சேரி நகராட்சி கண்டும் காணாமல் இருப்பது ஏன். சாலைகள் பொதுமக்களுக்கா அல்லது தள்ளுவண்டிக்கா என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
மாநிலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் இந்த தள்ளுவண்டி கடைகளை முழுவதுமாக அகற்ற கவர்னர், முதல்வர் புதுச்சேரி நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். கடைகளை, செஞ்சி சாலைக்கு மாற்றி, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நிம்மதியாக மணக்குள விநாயகரையும், அரவிந்தர், அன்னையை தரிசிக்க செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் தள்ளுவண்டி கடைகள் முளைக்காதவாறு மாவட்ட நிர்வாகம் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும்.