ADDED : ஜன 13, 2024 07:17 AM

புதுச்சேரி : முருங்கப்பாக்கம் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
புதுச்சேரியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் தினம் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடலுார் சாலை முருங்கப்பாக்கம் சந்திப்பில் குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் புதைவட மின் கேபிள் பதிப்பு போன்றவற்றால் பல மாதங்களாக சாலை சீரமைக்கப்படாமல் இருந்தது.
இதனால், அப்பகுதியில் தொடர் விபத்து அபாயம் இருந்து வந்தது.
இந்நிலையில் சாலைகளை சீரமைப்பது தொடர்பாக, பொறியாளர்களை அழைத்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆலோசனை நடத்தி பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்கவும், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் வேலைகளை துரிதப்படுத்தி முடிக்கவும், பொதுப்பணித்துறை சாலைகள் கோட்டங்களை சார்ந்த செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கடலுார் சாலையில் முருங்கப்பாக்கம் பகுதியில், சாலைகளை சீரமைக்கும் பணி நேற்று முன்தினம் இரவு துவங்கி விடிய விடிய நடந்தது.
இதற்கான பணிகளில், பொதுப்பணித்துறை நெடுஞ்சசாலை கோட்ட பொறியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.