UPDATED : நவ 10, 2026 10:27 AM
ADDED : நவ 10, 2026 10:25 AM

புதுச்சேரி: புதுச்சேரி, அரும்பார்த்தபுரம் வசந்தம் நகரை சேர்ந்தவர் ரவுடி முரளி, 26; பெயிண்டர். இவர், தனது நண்பர்கள் 5 பேருடன் வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு குளுனி பள்ளி பின்புறம் உள்ள தனியார் மனைபிரிவு பகுதியில் நேற்று மாலை மது குடித்து கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், முரளியை சுற்றி வளைத்து சராமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, கொலை கும்பல் சாவகாசமாக அங்கிருந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட முரளி மீது கடந்த ஆண்டு நடந்த ரவுடி ஜனா கொலை வழக்கு உள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய முரளியின் நண்பர்கள்4 பேர், வில்லியனுார் போலீஸ் நிலையம் சென்று தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனுார் போலீசார் முரளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலைக்கு பழிக்கு பழியாக முரளி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளத.
இதற்கிடையே, கடந்த 2ம் தேதி வாணரப்பேட்டையில் தமிழ்செல்வன் என்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். 6ம் தேதி லாஸ்பேட்டை மடுவுபேட் பகுதியில் பவித்ரன் என்ற வாலிபரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தது.
நேற்று முன்தினம் காலை பிள்ளைத்தோட்டம் கங்கையம்மன் கோவில் தெருவில், குமரகுரு பள்ளத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வினோத், குத்தி கொலை செய்யப்பட்டார். நேற்று வில்லியனுாரில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுபோன்று புதுச்சேரியில் தொடர் கொலை சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
