UPDATED : அக் 14, 2026 07:34 PM
ADDED : அக் 14, 2026 07:26 PM

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கத்தில் ரூ.1.32 லட்சம மதிப்பிலான குட்கா பொருட்களை சிறப்பு அதிரடிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மடுகரை – மொளப்பாக்கம் சாலையில் நேற்று மதியம் 12:30 மணியளவில், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கணேஷ், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் குற்றப்பிரிவு குழுவினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சூரமங்கலம் பகுதியில் இருந்து மடுகரை நோக்கி சென்ற மாருதி சுசுகி காரினை (டி.என்.36.க்யூ., 5405) போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.
காரில் 24 சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லீப், விமல் பாக்கு உள்ளிட்ட ரூ.1.32 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குட்கா பொருட்களை எடுத்து சென்ற மடுகரை சாகுல்ஹமீது 65, பெங்களூர் ராஜாராம் குய்யாராம், 40; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் பெங்களூரு இடைத்தரகர் மூலம் குட்கா பொருட்களை வாங்கி, புதுச்சேரியில் உள்ள கடைக்காரர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.
