/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.40 கோடி போலி மருந்து பறிமுதல் புதுச்சேரியில் 3 குடோன்களுக்கு 'சீல்'
/
ரூ.40 கோடி போலி மருந்து பறிமுதல் புதுச்சேரியில் 3 குடோன்களுக்கு 'சீல்'
ரூ.40 கோடி போலி மருந்து பறிமுதல் புதுச்சேரியில் 3 குடோன்களுக்கு 'சீல்'
ரூ.40 கோடி போலி மருந்து பறிமுதல் புதுச்சேரியில் 3 குடோன்களுக்கு 'சீல்'
ADDED : நவ 28, 2025 06:33 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் சி.பி.சி.ஐ.டி. , போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.40 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, மூன்று குடோன்களுக்கு 'சீல்' வைத்தனர்.
மருந்து தயாரிப்பு நிறுவனமான 'சன் பார்மசி' நிர்வாகம், தங்கள் நிறுவன மருந்துகள், புதுச்சேரியில் போலியாக தயாரிப்பதாக சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், மதுரையை சேர்ந்த ராஜா என்பவர், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் தங்கி, காரைக்குடியை சேர்ந்த ஏ.கே.ராணா, 45; மெய்யப்பன், 46; ஆகியோரின் பெயரில் போலி லைசென்ஸ் பெற்று, புதுச்சேரியில் பல இடங்களில் கடந்த 5 ஆண்டுகளாக போலி மருந்து தயாரித்து வந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, போலியாக லைசென்ஸ் தயாரித்து கொடுத்த ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்பேரில் நேற்று முன்தினம் டி.ஐ,ஜி., சத்தியசுந்தரம், எஸ்.பி., சுருதி, இன்ஸ்பெக்டர் பாபுஜி, புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் இந்துமதி, ஜெனிபர், ஆண்டோ உள்ளிட்ட குழுவினர் குருமாம்பேட்டில் ஒரு குடோனிலும், மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டையில் உள்ள இரு குடோன்களிலும் சோதனை நடத்தினர். இரண்டாம் நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. 24 மணி நேரம் நடந்த சோதனையில், ரூ.40 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், மூலப் பொருட்கள், மருந்து தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்களையும், அதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
போலி மருந்து தயாரிப்பு கூடங்களை மாநில சுகாதாரத்துறை செயலர் சவுதாரி முகமது யாசின் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார். இந்நிலையில், நேற்று வருகை தந்த மத்திய மருந்துகள் தர ஆய்வாளர் தேவகிரி தலைமையிலான குழுவினர், பறிமுதல் செய்த மருந்துகளின் மாதிரிகளை ஆய்வுக்கு கொண்டு சென்றனர்.
போலி மருந்து தயாரித்த மூன்று குடோன்களையும் நீதிமன்ற உத்தரவை பெற்று, நேற்று இரவு மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் இந்துமதி தலைமையிலான குழுவினர் 'சீல்' வைத்தனர்.
இந்த மோசடி தொடர்பாக மேலும் 7 குடோன்களில் சோதனை நடத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

