அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் ரிசார்ட்டிற்கு ‘சீல்’
அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் ரிசார்ட்டிற்கு ‘சீல்’
UPDATED : நவ 12, 2026 11:00 PM
ADDED : நவ 12, 2026 10:56 PM

புதுச்சேரி: அனுமதியின்றி கட்டடப்பட்ட தனியார் விடுதியை பி.பி.ஏ., அதிகாரிகள் 47 இடங்களில் சீல் வைத்து பூட்டினர்.
சின்னக்காலாப்பட்டு கடற்கரையோரம் தனியார் ரிசார்ட் (ஜேம்ஸ் கோர்ட்) செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட் மீது பிரபா தேவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அனுமதியின்றி மற்றும் திட்ட அனுமதி பெறாமல் வணிகக் கட்டடங்களை கட்டியுள்ளதாகவும், தனது சொத்துக்கான பட்டாவை முறைகேடாக மாற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, தெரிவித்து இருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2023ம் ஆண்டு செப்., 26 அன்று பிறப்பித்த உத்தரவில், உரிய சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் மீது 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதை தொடர்ந்து ஆய்வு செய்த பி.பி.ஏ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில், அங்கு பல கட்டடங்கள் பாதுகாப்பு அறை, அலுவலகம், விருந்தினர் அறைகள், வரவேற்பு கூடம், சமையல் கூடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதிகள் ஆஷா தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் நேரில் ஆஜரானார். அரசு தரப்பில் வாதங்களை முன்வைத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், நீதிமன்ற உத்தரவுகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என, அவகாசம் கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உத்தரவைச் செயல்படுத்த உத்தரவிட்டது. அதை தொடர்ந்து அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதற்கிடையில் நேற்று தனியார் ரிசார்ட்டினை ஆய்வு செய்த பி.பி.ஏ., அதிகாரிகள் அனுமதி இன்றி கட்டப்பட்ட ஒவ்வொரு பகுதியை சீல் வைத்தனர். மொத்தம் 47 இடங்களில் சீல் வைத்து பூட்டி, நோட்டீஸ் ஒட்டினர்.
நோட்டீசில், இந்த மூன்று மாடி வணிக விடுதிக் கட்டடம் இடிக்கப்பட்டு, சட்டப்பூர்வமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைவது, அல்லது ஆக்கிரமிப்பது குற்றமாகும். விதிகளை மீறி நுழைவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சீல் வில்லைகளை சேதப்படுத்துவதோ அல்லது அகற்றுவதோ சட்டவிரோதம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
