பி.டெக்., லேட்ரல் என்ட்ரியில் அனைவருக்கும் 'சீட்' உறுதி: பிற மாநில மாணவர்களுக்கும் அடிக்கிறது 'லக்'
பி.டெக்., லேட்ரல் என்ட்ரியில் அனைவருக்கும் 'சீட்' உறுதி: பிற மாநில மாணவர்களுக்கும் அடிக்கிறது 'லக்'
UPDATED : ஜூன் 20, 2026 12:40 PM
ADDED : ஜூன் 19, 2026 07:01 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் இந்த ஆண்டு 'பி.டெக். லேட்ரல் என்ட்ரி' படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் சீட் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரிகளில் டிப்ளமோ முடித்த மாணவர்களுக்காக, அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஆண்டுதோறும் 10 சதவீத இடங்கள் 'லேட்ரல் என்ட்ரி' சேர்க்கை முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவர்கள் நேரடியாக பி.டெக்., இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
இதற்கான சென்டாக் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 25ம் தேதி துவங்கி, இம்மாதம் 11ம் தேதி நிறைவடைந்தது. மாநிலத்தில் உள்ள மூன்று அரசு கல்லுாரிகள், 10 தனியார் கல்லுாரிகள் என, மொத்தம் 435 பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சீட்டுகள் உள்ளன.
ஆனால் இந்தாண்டு விண்ணப்பித்தவர்கள் வெறும் 210 மாணவர்கள் மட்டுமே. இதனால் இந்தாண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் தடையின்றி சீட் கிடைக்கும். அப்படி அனைவருக்கும் சீட் வழங்கப்பட்ட பிறகும் கூட, 225 இடங்கள் காலியாக இருக்கும்.
மாப்-அப் கவுன்சிலிங்கிற்குப் பிறகும் நிரம்பாத பட்சத்தில், இந்த இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு இது 'லக்' சீட்டுகளாக அமையப் போகிறது.
புதுச்சேரியில் 6 அரசு பாலிடெக்னிக் மற்றும் 1 தனியார் பாலிடெக்னிக் என, மொத்தம் 2,200 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு 600 மாணவர்கள் வரை தேர்ச்சி பெற்றுள்ள நிலையிலும், 210 பேர் மட்டுமே பி.டெக்., படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகவே இந்த வீழ்ச்சி தொடர்ந்து வருவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
விண்ணப்ப வீழ்ச்சிக்கான காரணங்களை பட்டியிட்டு கல்வியாளர்கள் கூறியதாவது: தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் தற்போது பி.டெக்., முடித்தவர்களை விட, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்த மாணவர்களையே அதிகம் விரும்புகின்றன. பி.டெக்., மாணவர்கள் விரைவாக வேலை மாறுவதாகவும், டிப்ளமோ மாணவர்கள் நிறுவனத்தில் நிலைத்து நின்று வேலை செய்வதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன.
பாலிடெக்னிக் முடித்தவுடனேயே நல்ல நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடுவதால், ஏழ்மை நிலை காரணமாக பெரும்பாலான மாணவர்கள் மேற்படிப்பைத் தவிர்த்து நேரடியாக வேலைக்குச் சேர்ந்து விடுகின்றனர்.
பொறியியல் கல்லுாரிகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணமும், தற்போதைய சூழலில் பொறியியல் படிப்புகளுக்கான மங்கலான எதிர்காலமும் மாணவர்களைப் பின்வாங்கச் செய்துள்ளன.
ஒரு காலத்தில் 10-ம் வகுப்பிற்குப் பிறகு பாலிடெக்னிக் சேர கடும் போட்டி நிலவியது. ஆனால், தற்போது பாலிடெக்னிக் சேர்க்கையே சரிவடைந்துள்ளது. உதாரணமாக, தள்ளாட்டத்தில் இருந்த அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி, தற்போது மகளிர் பொறியியல் கல்லுாரியாக மாற்றப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால், வரும் காலங்களில் புதுச்சேரியில் பி.டெக்., லேட்ரல் என்ட்ரி என்ற மாணவர் சேர்க்கை முறையையே மூடுவிழா காண வேண்டிய கட்டாயம் ஏற்படும் என கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
