/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பனித்திட்டு கடலில் கடற்பாசி அறுவடை
/
பனித்திட்டு கடலில் கடற்பாசி அறுவடை
ADDED : நவ 20, 2025 05:59 AM

பாகூர்: பனித்திட்டு கடலில் மிதவை படல்கள் மூலமாக வளர்க்கப்பட்ட கடற்பாசிகள் நேற்று அறுவடை செய்யப்பட்டது.
பிரதமர் மோடியின் கனவு திட்டமான கடற்பாசி வளர்ப்பு திட்டத்தை, புதுச்சேரியில் செயல்படுத்தும் விதமாக, புதுச்சேரி அரசு, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தினுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தலா இரண்டு மீனவ கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, கடற்பாசி வளர்ப்பு முன்னோடி திட்டம் துவங்கப்பட்டது.
ஏம்பலம் தொகுதி பனித்திட்டு மீனவ கிராமத்தில் கடலில் கடற்பாசி வளர்க்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 30ல் துவங்கப்பட்டது.கடல் பாசி விதைகளை பயன்படுத்தி, 16 மிதவை படல்கள் மூலமாக, பனித்திட்டு கடல் பகுதியில் கடற்பாசி விதகைள் நிர்மாணிக்கப்பட்டன. விதையிடப்பட்டு 45 நாட்கள் கடந்த நிலையில், கடற்பாசிகள் முழு வளர்ச்சி பெற்றுள்ளது. இவற்றை அறுவடை செய்யும் பணி நேற்று நடந்தது.
அமைச்சர் லட்சுமிநாராயணன், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் கடற்பாசி அறுவடையை பார்வையிட்டனர். மீன் வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி, துணை இயக்குனர்கள் மீரா சாஹிப், சாஜிமா,ராஜேந்திரன், திட்ட விஞ்ஞானிகள் வினோத், ஜான்சன், உதவி ஆய்வாளர்கள் கணேசன், பாலமுரளி உட்பட பலர் பங்கேற்றனர்.
560 கிலோ கடற்பாசிகளை விதைகளை பயன்படுத்தி முதல் அறுவடையில் 2,000 கிலோ முதல் தரமான கடற்பாசிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இந்த கடற்பாசிகள் மருத்துவம், உணவுப் பொருள், அழகு சாதன பொருட்கள் என பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கிடைக்கும் வருவாயில் 90 சதவீதம் கடற்பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், 10 சதவீதம் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கும் கிடைக்கும். ஒரு வருடத்தில், 4 முதல் 6 முறை கடற்பாசிகளை அறுவடை செய்யலாம் என,அதிகாரிகள் தெரிவித்தனர்.

