ஏரியில் வண்டல் மண் கொள்ளை 2 லாரி, 3 ஜெ.சி.பி., பறிமுதல்
ஏரியில் வண்டல் மண் கொள்ளை 2 லாரி, 3 ஜெ.சி.பி., பறிமுதல்
ADDED : ஆக 17, 2026 06:13 PM
பாகூர்: கிருமாம்பாக்கம் ஏரியில், வண்டல் மண் கொள்ளையில் ஈடுபட்ட, 2 டிப்பர் லாரி, 3 ஜெ.சி.பி., வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன.
பாகூர் கொம்யூன் கிருமாம்பாக்கத்தில், 320 ஏக்கர் பரப்பளவில் சின்ன ஏரி உள்ளது. இந்த ஏரியில் 43 மில்லியன் கன அடி நீரை சேமிக்க முடியும். இதன் மூலமாக இப்பகுதியில், 300 ஏக்கர் விளை நிலங்கள் பாசம் பெற்று வருகின்றன.
இந்த ஏரி பல ஆண்டுகளாக துார்வாரப்பட்டாமல் இருந்து வரும் நிலையில், நீர் சேமிப்பு பகுதி வண்டல் மண்ணால் துார்ந்துபோனது.
இதனால், இந்த ஏரியில் வண்டல் மண் எடுக்க பொதுப்பணித்துறை அனுமதி வழங்கி வருகிறது.
அதன்படி, இந்த ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றவர்கள் லாரிகள் மூலமாக மண்னை எடுத்து செல்கின்றனர்.
இதனிடையே, சிலர் சட்ட விரோதமாக ஏரியில் வண்டல் மண்னை எடுத்து சென்று மொத்தமாக குவித்து வைத்து, முறைகேடாக அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இந்த ஏரியில் வண்டல் எடுக்கும் பணியை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி கிருமாம்பாக்கத்தில் வண்டல் மண் ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் கடலுார் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாகூர் தாசில்தார் ராஜலட்சுமி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் நேற்று காலை கிருமாம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், அங்கிருந்த லாரிகளின் ‘பர்மிட்’களை ஆய்வு செய்த போது, போலி ஆவணங்கள் மூலமாக வண்டல் மண் கொள்ளையடிக்கப்பட்டு வருவது தெரியவந்தது.
இதையடுத்து, வண்டல் மண் கொள்ளையில் ஈடுபட்ட 2 டிப்பர் லாரி, 3 ஜெ.சி.பி., வாகனத்தை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து கிருமாம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாசில்தாரின் பறிமுதல் நடவடிக்கை பார்த்த அங்கிருந்த மற்ற டிரைவர்கள் லாரியுடன் தப்பிச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
