UPDATED : அக் 13, 2026 07:08 PM
ADDED : அக் 13, 2026 07:06 PM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு வேளாண் துறையின் தோட்டக்கலை பிரிவு சார்பில் ‘சேவா சங்கல்ப் அபியான்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி கணபதி செட்டிக்குளத்தில் நடந்தது.
வேளாண் அலுவலர் கோகுல லட்சுமி வரவேற்றார். தட்டாஞ்சாவடி உள்ளீட்டுப் பிரிவு துணை இயக்குநர் ஜோசப் ஆல்பர்ட் சிறப்புரையாற்றினார். அரோவில் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள், தோட்டக்கலைப் பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்வதற்கான தொழில் நுட்பங்கள் மற்றும் நிலையான வேளாண்மை நடைமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சிவசுப்ரமணியன், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பல்வேறு மானிய திட்டங்கள் மற்றும் பயன்கள் குறித்தும், பழங்கள் மற்றும் காய்கறிகளை உலர்த்தி, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதன் மூலம் அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைக்க சூரிய ஒளி உலர்த்தி திட்டம் பெரிதும் உதவும்.
மண்புழு உரம் தயாரித்தல், கூடுதல் வருமானத்திற்கு காளான் வளர்ப்பு மற்றும் விளைபொருட்களை நேரடியாக சந்தைப்படுத்த நடமாடும் விற்பனை வண்டிகள் ஆகியவற்றுக்கு அரசின் மானியங்கள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில், பங்கேற்ற விவசாயிகள் மற்றும் மகளிருக்கு காய்கறி விதை தொகுப்புகள், இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டங்களின் மானியங்களைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஆத்மா திட்டப் பணியாளர்கள், காலாப்பட்டு உழவர் உதவியக களப்பணியாளர்கள் மற்றும் தோட்டக்கலைப் பிரிவு ஊழியர்கள் செய்திருந்தனர்.
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்ட அலுவலர் தனசேகரன் நன்றி கூறினார்.
