/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் விழாவால் அலங்கோலமான லாஸ்பேட்டை சாலை; நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு சமூக பொறுப்பு வேண்டாமா...
/
கோவில் விழாவால் அலங்கோலமான லாஸ்பேட்டை சாலை; நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு சமூக பொறுப்பு வேண்டாமா...
கோவில் விழாவால் அலங்கோலமான லாஸ்பேட்டை சாலை; நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு சமூக பொறுப்பு வேண்டாமா...
கோவில் விழாவால் அலங்கோலமான லாஸ்பேட்டை சாலை; நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு சமூக பொறுப்பு வேண்டாமா...
ADDED : ஜூலை 13, 2025 12:23 AM

கோவில் விழாவில், கண்ட இடங்களில் வீசி எறிந்த குப்பையால் லாஸ்பேட்டை சாலை அலங்கோலமாக காட்சியளித்தது.
லாஸ்பேட்டை, நேதாஜி சிலை அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.அங்கு திரண்ட பொதுமக்களுக்கு அன்னதானம், மோர், ஜூஸ், கூழ் என பலவும் ஆங்காங்கே தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது. அவற்றை ருசித்து சாப்பிட்ட பொதுமக்கள் அப்படியே சாலையில் பொறுப்பில்லாமல் வீசி சென்றனர்.
கோவில் விழாவிற்கு கடை போட்டவர்களும் அந்த குப்பைகளை அகற்றாமல் அப்படியே போட்டு சென்றனர்.
இதனால் மறுநாள் காலையில் லாஸ்பேட்டை கல்லுாரி சாலையின் இருபுறமும் பாக்கு தட்டுகள், பிளாஸ்டிக் கிளாஸ்கள், கரும்பு சக்கை என, குப்பை குவிந்து அலங்கோலமாக காட்சியளித்தது. எச்சில் தட்டுகளால் அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசியது.அவ்வழியே வந்த மக்கள் முகம் சுளித்தபடியே சென்றனர்.
அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டினை அறிந்த உழவர்கரை நகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளை அள்ளிச் சென்றனர்.
மதுரையில் அண்மையில் நடந்த இந்து முன்னணி சார்பில் நடந்த முருகர் மாநாட்டில் 1.30 லட்சம் பேர் திரண்டனர். அவர்களுக்கும் உணவு, தண்ணீர் பாட்டீல்கள் தரப்பட்டன. லட்சக்கணக்கில் திரண்ட போதும் ஒரு குப்பை கூட இல்லை. பொறுப்புடன் அவற்றை சேகரித்து அகற்றிட உதவினர். உட்கார்ந்திருந்த சேர்களையும் அடுக்கி கொடுத்துவிட்டு சென்றனர்.
ஆனால், சில ஆயிரம் பேர் திரண்ட கோவில் நிகழ்ச்சியில் மலைபோல் குப்பைகள் குவிந்து, மறுநாள் அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியது.
பொதுமக்களின் பசிக்கு அன்னதானம், கூழ், தாகம் தணிக்க தண்ணீர், மோர், ஜூஸ் வழங்கியதெல்லாம் சரி தான். ஆனால் அப்படியே சமூக பொறுப்புடன், ஆங்காங்கே குப்பை தொட்டி வைத்து குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா? கோவில் நிகழ்ச்சி நடத்தியவர்கள், அன்னதானம், ஜூஸ், கூழ் வழங்கிய தன்னார்வளர்கள், அதனை வாங்கி சாப்பிட்ட பொதுமக்கள் என அனைவருக்கும் சமூக பொறுப்புணர்வு இல்லையா.
இதேபோல் தான் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ச்சி முடிந்த பிறகு குப்பைகளை தாறுமாறாக வீசி செல்வது அதிகரித்து வருகிறது. இது ஒரு கலாசாரமாகவே மாறி வருகிறது. இது நகராட்சிகளுக்கும், கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
பொது நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதிகளில் அன்னதானம், தண்ணீர் பந்தல், மோர் பந்தல், கடைகள் போடுபவர்களிடம், போதுமான எண்ணிக்கையில் குப்பை தொட்டிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்த பிறகே பொதுமக்களுக்கு எதனையும் வழங்க உள்ளாட்சி அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்.