புதுச்சேரியில் அலட்சியப்படுத்தப்படும் தமிழரின் வீர விளையாட்டான 'சிலம்பம்'
புதுச்சேரியில் அலட்சியப்படுத்தப்படும் தமிழரின் வீர விளையாட்டான 'சிலம்பம்'
UPDATED : அக் 07, 2026 10:33 PM
ADDED : அக் 07, 2026 08:17 PM
வீரமும் ஈரமும் குருதியில் கலந்த தமிழன், தன் தற்காப்புக்காக செதுக்கிய ஆதி கலை தான் சிலம்பம். காற்றில் சுழலும் மூங்கில் கம்பு எழுப்பும் 'சர்ர்... சர்ர்...' ஓசையில் தெறிக்கும் கம்பீரம், தமிழனின் போர்க்குணத்திற்கு சாட்சியாக இருக்கிறது.
தடி சுழற்றும் கை நேர்த்தி, நொடியில் திசைமாறும் கால் அசைவுகள், எதிரியின் தாக்குதலைத் தவிடுபொடியாக்கும் உடல் வளைவுகள் என வெறும் விளையாட்டாய் அல்லாமல், தமிழனின் அடையாளமாய் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தற்காப்புக் கலை, இன்றைக்கு ஆண்களையும் தாண்டி பெண்களின் கைகளிலும் கம்பீரமாய் சுழன்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் வீதியெங்கும், கோவில் திருவிழாக்களிலும், திருவிழா ஊர்வலங்களிலும் கம்பு சுழலும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால், எல்லையைக் கடந்து பக்கத்து புதுச்சேரிக்குள் அடி எடுத்து வைத்தால்... நிலைமையே வேறு.
அங்குச் சிலம்பத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு, அமைதியாய் அழுது கொண்டிருக்கிறது. காரணம்? புதுச்சேரியின் அதிகாரப்பூர்வ விளையாட்டுப் பட்டியலில் சிலம்பத்திற்கு இடமே இல்லை.
“எங்கள் சொந்த மண்ணின் அடையாளம் இப்படிச் சிதைக்கப்படுகிறதே...” என்று கலங்கும் சிலம்ப வீரர்களின் வார்த்தைகளில் வீரம் மறைந்து, வலியும் கண்ணீரும் மட்டுமே மிஞ்சுகிறது.
வலிகளுடன் சிலம்ப வீரர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் நிலைமை வேறு. அங்குப் பள்ளிக் கல்வித் துறை விளையாட்டுகளில் சிலம்பம் முதன்மை பெற்றுவிட்டது. தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீடு வழங்கி அரசாணையே வெளியிடப்பட்டு விட்டது. அதன் பலனாக, நேற்றைய சிலம்ப வீரர்கள் இன்றைக்குத் தீயணைப்புத் துறை உள்ளிட்ட சீருடைப் பணிகளில் கம்பீரமாகப் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
ஆனால், புதுச்சேரியிலோ கதவு சாத்தப்பட்டிருக்கிறது. பள்ளி அளவிலான விளையாட்டுப் பட்டியலில் கூட சிலம்பத்திற்கு இடம் தரப்படவில்லை. “எங்கள் மண்ணில் பிறந்து, எங்கள் பாட்டன் பூட்டன் வளர்த்த சிலம்பத்திற்கு இங்கு அங்கீகாரமில்லை. ஆனால், எல்லை தாண்டி வந்த 'மார்ஷியல் ஆர்ட்ஸ்' போன்ற பிற தற்காப்புக் கலைகளுக்கு மட்டும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு தருகிறார்கள். இது என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பும் வீரர்களின் தொண்டைக்குழியில் வேதனை அடைபடுகிறது.
சொந்த மண்ணின் பாரம்பரியக் கலைகளை, வீர விளையாட்டுகளைக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது அந்தந்த மாநில அரசுகளின் தலையாய கடமை. ஆனால், புதுச்சேரி அரசு இந்த விஷயத்தில் கைகட்டி, வேடிக்கை பார்ப்பது அந்த வீரக்கலைக்கே செய்யும் துரோகம்.
களத்தில் நின்று சுழற்ற வேண்டிய மூங்கில் கம்புகள், அங்கீகாரமின்மையால் மூலைகளில் முடங்கிக் கிடக்கின்றன. குறைந்தபட்சம் தமிழக அரசு பின்பற்றும் நடைமுறையையாவது புதுச்சேரி அரசு கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில், தமிழனின் அடையாளங்களில் ஒன்றான சிலம்பம் புதுச்சேரி மண்ணில் காலப்போக்கில் மறைந்தே போய்விடும் என்று எச்சரிக்கை மணி எழுப்புகின்றனர் சிலம்ப வீரர்கள்.
பாரம்பரியத்தைப் பலிகொடுத்துவிட்டு, அந்நியக் கலைகளுக்கு மகுடம் சூட்டும் போக்கை மாற்றி, புதுச்சேரி அரசு உடனடியாகச் சிலம்பத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதே அவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
