ADDED : ஜூலை 10, 2025 07:08 AM

பாகூர், : புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் சார்பில், மாநில அளவிலான சிலம்பம் பயிற்சி முகாம் பாகூரில் நடந்தது.
அகில இந்திய சிலம்பம் சம்மேளனத்தின் வழி காட்டுதல்படி, புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் சார்பில், 5வது மாநில அளவிலான பயிற்சி முகாம், பாகூர் பாரதி அரசு பள்ளி மைதானத்தில் நடந்தது.
முகாமில், பாகூர் கரிகாலச் சோழன் சிலம்பாட்டக் கழகம், வில்லியனுார் வந்தியத்தேவன் கலைக்கூடம், திருக்காஞ்சி நரிமேடு இளைஞர் நற்பணி மன்றம், புதுச்சேரி வள்ளுவர் மன்றம், கோரிமேடு வீர ஆஞ்சநேயர் கலைக்கூடம், போர்க்கலை பயிற்சி கூடம், ஆரோவில் ஷிவு பவுண்டேஷன் ஆகிய சிலம்ப பள்ளிகளின் வீரர் மற்றும் வீராங்கனைகள் உள்ளிட்ட புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிலம்ப வீரர்கள் பங்கேற்றனர்.
பயிற்சி முகாமில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள், அடுத்த மாதம் பாகூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். முகாம் நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராக புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் நலச் சங்க தலைவரும் புதுச்சேரி ஒலிம்பிக் சங்க இணைச் செயலாளருமான கராத்தே வளவன் பங்கேற்று, வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
சங்க கவுரவ தலைவர் சவுந்தர்ராஜன், துணைத் தலைவர் குமாரபாண்டியன், பொருளாளர் அதியமான், தொழில்நுட்பக் குழு தலைவர் விஜயகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்க பொதுச் செயலாளர் அன்புநிலவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.