திடக்கழிவு மேலாண்மை திட்ட கண்காணிப்பு ரோந்து குழு அமைப்பு
திடக்கழிவு மேலாண்மை திட்ட கண்காணிப்பு ரோந்து குழு அமைப்பு
ADDED : ஜூலை 08, 2026 02:01 AM
பாகூர்: பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்ட கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்தும் வகையில், 16 ஊழியர்கள் கொண்ட ரோந்துகுழு அமைக்கப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி, புதுச்சேரியில் முதல் முறையாக, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ரோந்து குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் கூறுகையில், 'திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி, அடிப்படையில் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார கழிவுகள், சிறப்பு கழிவுகள் என, 4 வகைகளாக பொது மக்களே பிரித்து அளிக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை திட்ட கண்காணிப்பு, அமைப்பை வலுப்படுத்தும் வகையில், ரோந்து பணியில் ஈடுபட மொத்தம் 16 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து காலை, இரவு நேரங்களில்,தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவர். இந்த குழுவானது, சுகாதாரப் பணிகளை திறம்பட கண்காணித்தல், பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தல் மற்றும் சேவை வழங்கலை மேலும் மேம்படுத்துதல் ஆகியவற்றை உறுதி செய்யும்.
வீடு தோறும் குப்பை சேகரிப்பு, தெரு துாய்மைப் பணிகள், குப்பை தேக்கம், சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான பிற புகார்கள் குறித்து, பொது மக்கள் தங்களது சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கான அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
துாய்மையைப் பேணுதல், குப்பைகள் உற்பத்தி ஆகும் இடத்திலேயே நான்கு வகையாக தரம் பிரித்தல் மற்றும் திடக்கழிவுகளை முறையாக அகற்றுவதில் அனைத்து பொது மக்களும் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டும்' என்றார்.
