புதுச்சேரியில் விரைவில் ரயில் முனையம்: கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்
புதுச்சேரியில் விரைவில் ரயில் முனையம்: கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்
UPDATED : செப் 16, 2026 11:35 PM
ADDED : செப் 16, 2026 11:32 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய ரயில் நிலையம் அமைய உள்ளது என, கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு தொழில் கண்காட்சியினை அவர், துவக்கி வைத்து பேசியதாவது;
காரைக்கால் துறைமுகத்தின் திறனை தற்போது 20 மில்லியன் டன்னிலிருந்து 100 மில்லியன் டன்னாக உயர்த்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். காரைக்காலை சுற்றியுள்ள பகுதிகளில் துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள் உருவாக வேண்டும். இது காரைக்காலில் மிகப்பெரிய வளர்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்கும்.
இதேபோல், புதுச்சேரிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
முதலாவதாக, விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த வேண்டும். புதுச்சேரி விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரையிறங்க வேண்டும். அதற்காக ஓடுபாதையின் நீளத்தை அதிகரித்து வருகிறோம்.
அடுத்ததாக, சென்னையை இணைக்கும் இரண்டு சாலைகளை மேம்படுத்தப்பட வேண்டும். புதுச்சேரியிலிருந்து சென்னையை மிக குறுகிய நேரத்தில் சென்றடையும் நிலை உருவாக வேண்டும்.
இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இந்த இரண்டு திட்டங்களிலும் ரூ.25,000 கோடி முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், தென் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுடனும் சிறந்த இணைப்பு கிடைக்கும்.
மூன்றாவதாக, ரயில்வே இணைப்பு. தற்போது ரயில்கள் விழுப்புரம் சென்று அங்கு 45 நிமிடங்கள் நிற்கின்றன. பின், இன்ஜினை மாற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு வருகின்றன. புதுச்சேரிக்கே ஒரு முனைய ரயில் நிலையம் ஏன் இருக்கக்கூடாது. அங்கிருந்தே ரயில்கள் புறப்படக்கூடிய வகையில் ஒரு முனைய ரயில் நிலையம் அமைக்க வேண்டும். ரயில்வே அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் புதுச்சேரியில் ஒரு புதிய ரயில் நிலையம் அமையவுள்ளது.
எதிர்காலத்தில் இங்கிருந்து தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அதிவேக ரயில்களும் இயக்கப்படும்.
அடுத்ததாக, மின்சாரத் தேவை. நாம் சொந்தமாக அதிக மின்சாரம் உற்பத்தி செய்வதில்லை. தற்போதைய மின்சாரத் தேவை 550 மெகாவாட் இருக்கலாம். நாம் திட்டமிட்டு வரும் தொழில்மயமாக்கலை கருத்தில் கொண்டால், எதிர்காலத்தில் குறைந்தபட்சம் 1,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். எதிர்கால மின்சாரத் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என, திட்டமிட்டு வருகிறோம்' என்றார்.
