ADDED : நவ 05, 2024 06:59 AM

புதுச்சேரி: தேசிய தர உறுதி தரநிலைகள் திட்டம் குறித்து மருத்துவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று நடந்தது.
தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் சார்பில், பொது சுகாதார வசதிகள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கான குறிப்பிட்ட தேவைகளை வைத்து தேசிய தர உறுதி தரநிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், அரசு மருத்துவமனைகளில் தர நிர்ணயம் செய்வது குறித்து புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
முகாமை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் துவக்கி வைத்தார். சிறப்பு பயிற்சி அதிகாரிகள் டாக்டர் அபய் தஹியா,நவின் குமார் ஆகியோர் டாக்டர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸா பேகம்,மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறைதீர் அதிகாரி ரவி, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி குரு பிரசாத் டாக்டர் உமா சங்கர் உட்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.